பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

விந்தன் கதைகள்

இப்போது மட்டும் என்ன? இந்த இந்து சமூகத்திலேயே இருந்து கொண்டு நாம் என்ன வாழ்ந்துவிடப் போகிறோம்? வேண்டுமானால் ரங்காவையும் இன்னொரு இருமல்காரனைப் பார்த்துக் கொடுக்கலாம்; அவ்வளவு தான்! - அப்பப்பா! யார் என்ன சொன்னாலும் சரி, முதல் இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதி மட்டும் இந்தப் பெண்ணுக்கு நேரவே வேண்டாம், ஆண்டவனே!

ஆமாம், அவளுடைய செளகரியத்திற்காக நாம் இந்த இந்து சமூகத்திற்கே ஒரு முழுக்குப் போட்டு விட்டால் என்ன? அந்தப் பிள்ளையாண்டான் மட்டும் ஒப்புக் கொள்ளவதாயிருந்தால் நாமும் ரங்காவின் நலத்திற்காகக் கிறிஸ்துவ மதத்தையே வேண்டுமானால் தழுவி விடலாமே!

இந்தச் சங்கடமெல்லாம் என்னத்திற்கு? என்னமோ! ‘கலப்புமணம்’ என்கிறார்களே, அப்படிச் செய்துவிட்டால் என்ன? - ஊராரும் உறவினரும் ஏசுவார்கள் - ஆனால் என்ன? அவர்களா என்னுடைய துன்பத்தை அனுபவிக்கிறார்கள்?

இப்படி யெல்லாம் எண்ணி என் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கேற்றாற்போல் அடிக்கடி அவன் எனக்கு எழுதும் கடிதங்களின் மூலம் அன்பை வளர்த்து வந்தான். பத்துப் பதினைந்து நாட்கள் லீவில் வரும்போதெல்லாம் அவன் என் ஊருக்கு வருவான். எந்த ஹோட்டலில் தங்கினாலும் என்னையும் என் வீட்டையும் மறக்க மாட்டான். அடிக்கடி என்னுடன் அளவளாவி விட்டுப் போவான். என்னுடைய சுக துக்கங்களைப் பற்றி அக்கறையோடு விசாரிப்பான். நானும் என்னுடைய துன்பங்களையும் துயரங்களையும் பற்றி அவனிடம் சாங்கோபாங்கமாக விவரிப்பேன்.

***

ப்படியே இரண்டு மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. இதற்கு மத்தியில் என் உறவினரிடையே நான் எதிர்பார்த்திருந்த இரண்டு வரன்களுக்கும் வெவ்வேறு இடங்களில் பெண் பார்த்துக் கல்யாணமும் நடந்து விட்டது. என் அம்மாவும் கண்ணை மூடிவிட்டாள்.

எனக்கு அசாத்தியத் துணிச்சல் ஏற்பட்டு விட்டது. எத்தனையோ நாட்களாக என் உள்ளத்தில் அமுக்கி வைத்துக் கொண்டிருந்த ஆசையை அன்று ரங்காவிடம் தெரிவித்தேன். அவள் சிரித்தாள்.