பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

விந்தன் கதைகள்

உண்டுண்டுறங்குவதேயல்லாது வேறொன்றும் கண்டிலாத அடியார்’கள், தங்களுக்கு இயற்கையாயுள்ள சோம் பேறித்தனத்தால் புண்ணியத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு, எச்சில் இலையை எடுத்துப் போடும் வேலையைக் கூட அன்னதானம் செய்பவர்கள் தலையிலேயே கட்டிவிட்ட தந்திரத்தை அந்த அம்மாள் இந்த ‘அணுகுண்டு, சகாப்’தத்தில் கூட அறியாமலிருந்தது எனக்கு ஆச்சரியமாய்த் தானிருந்தது.

என்னுடைய வியப்பை வெளியே காட்டி அந்த அம்மாளின் மனதைப் புண்படுத்த விரும்பாத நான், “பரவாயில்லை: இருக்கட்டும் அம்மா!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தெருவுக்கு வந்தேன். என் கையிலிருந்து இலையைக் கண்டதும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு ஜீவன்கள் என்னை நோக்கி ஓட்டமாய் ஓடி வந்தன. அவற்றில் ஒன்று நாய்; இன்னொன்று பெயருக்கு ‘மனித’னாகப் பிறந்திருந்த சோலையப்பன்.

“சாமி, சாமி! அந்த இலையை இப்படிக் கொடுங்க, சாமி கீழே போட்டுடாதீங்க, சாமி! என்று கெஞ்சினான் அவன்.

அவனுக்குப் பக்கத்திலே நாய் வாயைப் பிளந்து கொண்டு, நாக்கை நீட்டிக் கொண்டு, வாலை ஆட்டிக் கொண்டு, என்னை நன்றியுடன் பார்த்துக்கொண்டு நின்றது.

அந்த நாயைப் போலவே அவனும் என்னை நன்றியுடன் பார்த்தான்; வாயைத் திறந்தான்; நாக்கை நீட்டினான். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்; நாய் வாலை ஆட்டிற்று; அவன் ஆட்டவில்லை! - அதுகூட அவன் குற்றமில்லை; காணாமற்போன ‘கருணை’ அந்தக் ‘கருணைக் கட’லைச் சேர்ந்ததுதானே!

மனிதர்களுக்கு ஒரு விசித்திரமான மனோபாவம். என்னைப் போன்ற-அதாவது பணத்தைக் கொண்டு எந்த விதத்திலும் சாப்பாட்டுக்கு வசதி செய்து கொள்ளக் கூடியவர்களைக் கண்டால் அவர்கள் வருந்தி வருந்தி விருந்துக்கு அழைக்கிறார்கள்; மறுத்தால் அவர்களுக்குக் கோபம் கூட வந்துவிடுகிறது. ஆனால் இந்தச் ‘சோலையப்பன்கள்’- அதாவது பணத்தைக்கொண்டு எந்த விதத்திலும் சாப்பாட்டுக்கு வசதி செய்து கொள்ள முடியாதவர்கள்-வலுவில் வாசலுக்கு வந்து ஒரு கை சோறு கேட்டால் கூட எரிந்து விழுகிறார்கள்! - ஏன் இப்படி?