பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

விந்தன் கதைகள்

இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்ததும், நான் சோலையைப்பனின் பிற்கால வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கலானேன்.

“இந்த அறுவடை வேலை முடிந்ததும் அவன் வழக்கம் போல எச்சில் இலைக்கு நாயுடன் போட்டி போட வேண்டியதுதானா?” என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்தது.

“ஏன் இல்லை? அப்படிச் செய்தால் என்ன?” என்று மறுகணம் என் வாய் முணுமுணுத்தது.

உடனே சோலையப்பனைக் கைதட்டிக் கூப்பிட்டு, “உனக்கு என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டேன்.

அவன் ஒரு முறை என்னை உற்றுப் பார்த்து விட்டு’ “தெரிகிறதுங்க” என்றான்.

“சாயந்திரம் வேலை முடிந்ததும் என்னை வந்து பார்க்கிறாயா?”

“பார்க்கிறேனுங்க!”

“சரி, போ!” என்று சொல்லிவிட்டு நான் என்னுடைய நண்பரின் வீட்டுக்குத் திரும்பினேன்.

அன்று மாலை அவன் வந்தான்.

“என்ன, சோலையப்பா! உனக்குப் படிக்கத்தெரியுமா?” என்று கேட்டேன்.

“ஏதோ கொஞ்சந் தெரியுங்க; மதுரைவீரன் கதை, தேசிங்குராஜன் கதை-இதெல்லாம் படிப்பேனுங்க!”

“தேவலையே, அவ்வளவு தூரம் நீ படித்திருக்கிறாயா?”

“எல்லாம் அந்தக் காந்தி வாத்தியாரு புண்ணியமுங்க!”

“அது யார், காந்தி வாத்தியார்?”

“அவர் இப்போ செத்துப் பூட்டாரு! நல்லவரு, பாவம் அவரு, காந்தி எங்க எனத்தவரை யெல்லாம் முன்னுக்குக் கொண்டாரச் சொல்றாருன்று சேரிக்கு வந்து, எங்களுக்கெல்லாம் படிப்புச் சொல்லிக் கொடுப்பாருங்க! நாங்க அவரை ‘காந்தி வாத்தியாரு, காந்தி வாத்தியாரு’ன்னுதான் கூப்பிடுவோமுங்க!”