பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரே உரிமை

121

“என்ன இருந்தாலும் நான் பறையன் பறையன் தானுங்களே? என் கடையிலே யாராச்சும் ரொட்டி, வாங்கணும்னா அவங்களும் பறையர்களாத்தானே இருக்கணும்? அவங்களுக்குத்தான் கூழுக்கே பஞ்சமாச்சுதுங்களே, அவங்க எங்கே ரொட்டி, கிட்டி வாங்கப் போறாங்க? வந்தா ஒசந்த சாதிக்காரருதான் வரணும். அவங்க எங்கிட்ட எங்கேயாச்சும் வருவாங்களா?-ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லணுங்க; அந்த மட்டும் அவங்க என் கடைக்கு வராம இருந்ததோடு நின்னாங்களே ‘பறப் பயலுக்கு இங்கே என்னடா ரொட்டிக்கடை?’ன்னு என்னையும் அடியா அடிச்சுப் போட்டு, இந்தக் கடையையும் காலி பண்ணாமே இருந்தாங்களே, அதைச் சொல்லுங்க!”

“என்னடா, திருப்பித் திருப்பிப் பறையன், பறையன் என்கிறாயே?” என்று நான் அலுத்துக் கொண்டேன்.

“நானாங்க சொல்றேன்? ஊர் சொல்லுது, உலகம் சொல்லுதுங்க! இந்தப் பதினஞ்சு நாளா என் கடையை யாரும் எட்டிப் பார்க்காமலிருப்பதிலிருந்தே இது தெரியலைங்களா?”

“சரி, அப்படியென்றால் நீ இப்பொழுது என்னதான் சொல்கிறாய்?”

“இது உங்க கடை, இதிலே போட்டிருக்கிற பணம் உங்க பணம். நீங்களே இந்தக் கடையை எடுத்துக்குங்கோன்னு சொல்றேன்!”

“இதென்னடா வேடிக்கையாய் யிருக்கிறதே! உனக்குத் தினசரி வேலை கிடைப்பதற்குத் தான் வழியில்லை; யாருடைய உதவியையாவது கொண்டு சொற்ப முதலில் ஒரு ரொட்டிக் கடை, மிட்டாய்க் கடை இப்படி ஏதாவது ஒன்றை வைத்துப் பிழைத்துக் கொள்வதற்குக் கூடவா உனக்கு உரிமை இல்லை?”

“ஏதுங்க, யோசித்துப் பார்க்கப்போனா எனக்கு இருப்பது ஒரே உரிமைதானுங்களே?”

“அது என்னடா, ஒரே உரிமை?”

“வேறே என்னங்க, தற்கொலை செய்துகொள்ளும் உரிமை தானுங்க அது” என்றான் அவன்.

அவன் கண்களில் நீர் சுரந்தது.

பாவம், அதற்குக்கூட உரிமை இல்லை என்னும் விஷயம் அவனைப் போன்ற அப்பாவிகளுக்கு எப்படித் தெரியும்?