பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாட்டுத் தொழுவம்

திகாரப் பூர்வமான சட்ட திட்டங்களால் மனித வர்க்கத்தை அடக்கி ஆண்டுவிட முடியும் என்று நம்புவது அறியாமை. மனிதன் நினைத்தால் அந்தச் சட்ட திட்டங்களை மீறிவிட முடியும். ஆனால் அன்பின் ஆக்கினைகளை மீறுவதற்கு மனிதன் சக்தியற்றவன். ஆகையால்தான் நமது நாட்டில் அவ்வப்பொழுது தோன்றி மறைந்த மகான்கள், ‘அன்பே ஆண்டவன்’ என்று கூறியிருக்கிறார்கள். வாழ்க்கையில் அன்புக்கு இடமில்லையென்றால் இன்பத்துக்கு இடம் ஏது?

அனைவரும் பொதுவாக அன்பில்தான் பிறக்கிறோம்; அன்பில்தான் வளர்கிறோம். ஆனால் எல்லோருமே அன்பில் வாழ முடிகிறதா? இல்லை. அப்படி வாழ முடியாத தரித்திர தேவதைகளில் நானும் ஒருத்தி.

பாவாடை கட்டி நான் எல்லோரும் பார்க்கக் கூடிய பாலகியாயிருந்தபோது அன்பைக் கண்டேன். அந்த அன்பின் காரணமாகப் பலவிதமான ஆடை அணிகளை அணிந்து பார்த்தேன்; விதவிதமான பட்சணம் பழ வகைளைத் தின்று பார்த்தேன்; அழகான பொம்மைகளுடன் ஆடிக் களித்தேன். அப்பாவின் அருமைப் பெண்ணாயிருந்தது, அம்மாவின் கொஞ்சும் கிளியாயிருந்தது எத்தனையோ ஆடல் பாடல்களைப் பார்த்தும் கேட்டும் அனுபவித்தேன். ஆனால் இன்றோ?

அந்தக் காலம் மலையேறி விட்டது, எத்தனையோ நாட்கள் என்னை யாரும் பார்க்கமுடியாத இருட்டறையில் இருந்த பிறகு, கடைசியில் ஒரு நாள் அவர் வந்தார். அவருடன் சில தரகர்களும் வந்திருந்தனர். தரகர்கள் என்றால் இங்கே நிஜத் தரகர்கள் என்று அர்த்தமில்லை; எல்லாம் அவருடைய உற்றார், உறவினர்தான். ஏதாவது ஆடு, மாடு வாங்கும்போது பேரம் நடக்கும் பாருங்கள், அதே மாதிரிதான் ஏறக்குறைய என்னுடைய கல்யாணப் பேச்சும் நடந்தது. பேரமெல்லாம் ஒருவாறு பேசி முடித்தார்கள். ஒரு நாளையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அன்று இரு வீட்டாருமாகச் சேர்ந்து ஊரார், உறவினரைக் கூட்டினார்கள். நான்கழுத்தைக் குனிந்து கொடுத்தேன்; அவர் தாலியைக் கட்டி வைத்தார். அவ்வளவுதான்; அன்றைய தினத்திலிருந்து நான் அவருடைய ஏகபோக உரிமைப் பொருளாக ஆகிவிட்டேன்.