பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

விந்தன் கதைகள்

அதாவது, அவர் இனி என்னை என்ன செய்தாலும் சரி; ‘கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்!’

ஆனால் இந்த நியாயம் அவருக்கு மட்டும்தான்; எனக்குக் கிடையவே கிடையாது-சமுதாயத்தின் சட்ட திட்டப்படி!

***

தெரிந்த ஊரை விட்டு, பிறந்த வீட்டைவிட்டு, பெற்ற தாயைவிட்டு, வளர்த்த தந்தையை விட்டு, தெரியாத ஊருக்குள் நுழைந்தேன்; பிறக்காத வீட்டுக்குள் புகுந்தேன்; பெற்ற தாயின் பரிவுக்குப் பதில் வாய்த்த மாமியின் கொடுமையைக் கண்டேன்; என்னை வீட்டுக் காரியம் செய்ய விடாத தந்தைக்குப் பதில் எடுத்ததற்கெல்லாம் என்னையே காரியம் செய்யவிடும் மாமனாரைக் கண்டேன்.

இவர்கள் மட்டுமா? தினந்தோறும் காலை இரண்டு மணிக்கே எழுந்து நான் அடுப்பைக் கட்டிக் கொண்டு அழவேண்டுமென்பதற்காக, அடுத்த ஊரிலுள்ள கலாசாலையில் படிக்கும் இரண்டு மைத்துனன்மார் எனக்கு இருந்தனர். மாமியார் தினசரி என்னுடன் மல்லுக்கு நிற்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஒரு மைத்துணியும் இருந்தாள். அவள் பெயர் மாலினி; பெயரில் இருக்கும் இனிமை சுபாவத்தில் கிடையாது. மாடும் ஒன்று இருந்தது; தினசரி இரண்டு வேளையும் பால் மட்டும் கறந்து கொடுத்து விட்டுச் செல்வதற்காக ஒரு வேலைக்காரனும் இருந்தான். மற்ற வேலைகளுக்குத்தான் நான் ஒருத்தி இருக்கிறேனே!

ஆனால், அவர் மட்டும் என்னிடம் அன்பாயிருந்திருந்தால் இத்தனை துன்பங்களும் என்னை ஒன்றும் பாதித்திருக்காது; பாதித்திருக்கவும் முடியாது.

அதுதான் இல்லை; அவருடைய சுபாவமே அலாதியாயிருந்தது. அவரைப்போல் இந்த உலகத்தில் வேறு யாராவது இருப்பார்களோ, இருக்கமாட்டார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் மட்டும் அப்படியிருந்தது உண்மை.

தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டியிருக்கும்போது தான் அவர் என்னுடன் பேசுவார். அப்படிப் பேசும் போதும் அவருடைய பேச்சில் அன்பைக் காண முடியாது; அதிகாரத்தைத்தான் காணமுடியும்.