பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விந்தன் கதைகளைப் பற்றி.....
கி. சந்திரசேகரன்

சிறுகதை யுகம் இது. எழுத்தாளன் என்ற பெயருக்குத் தகுதியைத் தேடித் தருவது சிறுகதை சிருஷ்டி ஒன்றே என்பது சிலரின் கருத்து.

கவனித்தோமானால், கலை அம்சங்கள் பெற்றிருப்பது எதுவாயினும் அது இலக்கியமேதான் என்பது தெளிவுபடும். நாவல் மட்டும் குறைந்ததா? அல்லது கட்டுரை, நாடகம் முதலியவைதாம் தாழ்ந்தவையா? இல்லை. ஒரு சிறு கடிதமானாலும் வாழ்க்கைத் தத்துவம் அதில் ததும்பினால் அதைவிட ரசிக்கக்கூடிய இலக்கியமுண்டா?

தமிழகத்தில் இன்று மலிந்து கிடப்பவை சிறுகதைக் கோவைகள்தாம். இருப்பினும், ஒன்றுபோல் எல்லாமே நம்மைக் கவராது போகா என்ற எண்ணமும் தோன்றுவதாலேயே, புதிய புத்தகங்கள் வெளிவருவதை நாம் ஆசையுடன் வரவேற்கின்றோம்.

முகத்தைச் சுளிக்காது எதிர்கொண்டழைக்கத் தகுந்தவைகளில் “விந்தன்” தரும் புத்தகமும் சேர்க்கப்பட வேண்டியதே. ஆழ்ந்த மனச் சுழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்றவை இங்குள்ள கதைகளில் சில. ஒரு முறைக்கு இரு முறையாக அவற்றின் கருத்து நம்மைத் துழாவ வைப்பதற்குக் காரணம் அதுவே. அபிப்ராயத்தின் தொனி விசேஷம் (Suggestion) சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டுவிடுகின்றது; சில வேளைகளில் உலுக்கியும் விடுகின்றது - இதற்குச் சான்று “வருந்துவார் யார்?” போன்ற சின்னஞ் சிறு கதைகளே.

கதைக்கென்ற தனி பாஷையோ, அல்லது திடுக்கிடும் சம்பவமோ நண்பருடைய கற்பனைத் திறனை வீணாக்கவில்லை; மனித இனத்தை இழிவாக்கும் நிகழ்ச்சியோ, அல்லது இந்திய நாகரிகத்தின் சீர்குலைவுக்கு வழி செய்யும் உணர்ச்சி மாறாட்டமோ இங்கு இல்லை; புதுமைக்கென வெறி பிடித்தலையும் கற்பனைக் கோளாறுகளும் காணவில்லை.

எல்லாவற்றையும் விட மற்றவர்களிடம் சகஜமாய்க் காணப்படும் நிரந்தமின்மையின் சின்னங்கள் எதையும் நண்பர் இதுவரை பெறாது இருத்தலே அவருக்கு மேன்மை அளிக்குமென நான் நம்புகின்றேன். இலக்கிய சேவையை அவர் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றும் விரும்புகின்றேன்.

7–2-53,

ஆசிரமம், மயிலை