பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

விந்தன் கதைகள்

பேய்க்கு இடம் கொடுத்தாலும் கொடுக்கலாம்; பெண்ணுக்கு இடம் கொடுக்கக்கூடாதாம். உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் நான் மட்டும்தானா பெண்? அவருடைய தாயார்?....... அவள் ஆணாக்கும்!

* * *

ன்னுடைய வாழ்க்கையைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் அவ்வளவையும் சொல்லி உங்களுடைய அருமையான நேரத்தை வீணாக்குவதில் என்ன பயன்? துன்பம் நிறைந்த என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் அனுபவிப்பதற்கு என்ன இன்பம் இருக்கப் போகிறது?

கடைசியில் எனக்கும் அகிலாவுக்கும் இடையே தொங்கவிடப்பட்ட படுதாவை என்னால் கிழித்து எறிய முடியவில்லை. விட்டுப்போன அவளுடைய நேசம் என்னை மிகவும் பாதித்தது. நாளடைவில் நான் சூரிய வெப்பத்தைக் காணாத செடிபோல் சுருங்கிப் போனேன்.

இந்த நிலையில்தான் மூன்றாவது தடவையாக என் முழுக்கு நின்றது. ஏற்கெனவே, உள்ளமும் உடலும் சோர்ந்து போயிருந்த எனக்கு இதுவும் வாய்த்தால் கேட்க வேண்டுமா? என்னால் வீட்டுக் காரியங்களைச் செய்ய முடியவில்லை. அசதி அதிகமாயிருந்தது. சாப்பாடும் சரிவர ஏற்றுக் கொள்ளவில்லை. வேலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. வசவுகளுக்கோ ஒர் அளவில்லை. வீட்டிலோ அடிக்கும் கையைத் தவிர, அணைக்கும் கை இல்லை.

ஒரு நாள் இரவு பாருங்கள் வழக்கம்போல் எல்லோரும் சாப்பிட்டான பிறகு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது மாடு ‘அம்மா, அம்மா’ என்று ஓயாமல் கத்திக் கொண்டிருந்தது. வெளியே உட்கார்ந்திருந்த அவர், கொஞ்சம் வைக்கோலை எடுத்துக் கொண்டு போனார். அன்று எனக்குப்பதிலாக அவர் அந்த வேலையைச் செய்து விட்டது, அவருடைய தாயாருக்குப் பொறுக்கவில்லை. "ஏண்டா, அப்பா நீதான் காலையில் போய் சாயங்காலம் வரை அங்கே உழைத்துவிட்டு வருகிறாயே, வீட்டில் இருக்கும் அவளுக்கு என்ன கேடு? மாடுதான் அத்தனை நாழியாகக் கத்துகிறதே, கொஞ்சம் வைக்கோலைக் கொண்டுபோய்ப் போட வேண்டாமோ?" என்று உருகினாள்.