பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

விந்தன் கதைகள்

விஷயத்தை அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துவிட அவனுக்கு விருப்பமில்லை. கொஞ்சம் ஆதியோடந்தமாகவே ஆரம்பித்தான்.

"நேற்று ஞாயிற்றுக்கிழமையோ இல்லையோ, என் அப்பாவுக்கு ஆபீஸ் கிடையாது. நான், என் அம்மா, அப்பா எல்லோரும் மத்தியானம் சாப்பிட்டானதும் சினிமாவுக்குப் போனோம்....."

"என்ன, சினிமாவா அதென்னடா, சினிமா?”

சங்கருக்குச் சிரிப்பு வந்தது "என்னடா சுத்தப் பட்டிக் காட்டு ஆசாமியாயிருக்கிறாயே? உனக்கு சினிமாவென்றாலே இன்னதென்று தெரியாதா?" என்று கேட்டான்.

"தெரியாது.டா" என்றான் மணி, முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு.

"அட, நிஜமாவா" என்று மீண்டும் கேட்டான் சங்கர். அவனால் நம்பமுடியவில்லை.

“நிஜமாத்தாண்டா" என்றான் மணி.

"அப்படின்னா சொல்றேன் கேளு; சினிமான்னா, எல்லாம் ஒரே படமாயிருக்கும். ராஜா படம், ராணி படம், திருடன் படம் எல்லாம் வரும். அந்தப் படமெல்லாம் சும்மா அப்படியே இருக்கும்னு நினைக்கிறாயா? இல்லே, ஆடும், பாடும், பேசும், சிரிக்கும்-எல்லாம் செய்யும்"

"அப்படியா சங்கர் இன்னொரு சமயம் நீ போறப்போ என்னையும் கூட்டிக்கிட்டுப் போறயா?”

"உம்...... சும்மாவா? காசு எடுத்துண்டு வரணும்: இல்லாட்டா உள்ளே விடமாட்டான்.”

"சரி, அது போகட்டும் சங்கர் இந்தக் குதிரை உனக்கு ஏது?..... அதைச் சொல்லு!”

"ஆமாம், ஆமாம்! அதுக்குள்ளே மறந்துட்டேனே! நாங்க எல்லோரும் சினிமாவுக்குப் போனோமா, அப்புறம் நேரே ஹோட்டலுக்கு வந்தோம்.....!”

“அது என்னடா, ஹோட்டல்....... ?”