பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனக் குறை

157

பாவம், ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைப் போலவே இந்த நாராயணமூர்த்தியும், நாத்தனாராகவும் மாமியாராகவும் மாமனாராகவும் பின்னால் அவதாரம் எடுப்பான் என்பதை அவர்கள் கண்டார்களா? இல்லை, குமுதம்தான் கண்டாளா?

அன்று இருபத்தைந்து ரூபாய் கடன் கேட்டு வாங்கி வரலாமென்று ஹரிகிருஷ்ணன் வீட்டிற்குப் போயிருந்தான் நாராயணமூர்த்தி, என்று மில்லாதபடி அன்று வீட்டிற்குள் நுழையும்போதே ரேடியோவின் அலறல் அவன் காதில் விழுந்தது. அவனும் இதற்கு முன்னால் எத்தனையோ முறை ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு வந்திருக்கிறான்; ரேடியோவின் அலறலைக் கேட்டது கிடையாது!-இன்று...... ?

அவனுக்கு ஏது ரேடியோ?

"அடேயப்பா! தன்னைப் போல் மாதம் எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் வாங்கும் இவன் என்னவெல்லாம் செய்கிறான்!” என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்த அவனை, "என்ன, ஸ்ரீமந் நாராயணமூர்த்தி ஒரு முறையாவது 'மகாலக்ஷ்மி'யுடன்நம் வீட்டிற்கு விஜயம் செய்யக்கூடாதோ?" என்று கேட்டுக்கொண்டே வரவேற்றான் ஹரிகிருஷ்ணன்.

"மகாலக்ஷ்மி யில்லை; அவளுடைய அக்கா!" என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான் நாராயணமூர்த்தி.

அங்கங்கே காணப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களும், விதம் விதமான மேஜை, நாற்காலி, ஸோபாக்களும் அவனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டிவிட்டன. அவற்றைப் பார்க்க அவனுக்குத் தன் வேட்டகத்தாரின் மீது கோபம் கோபமாய் வந்தது.

அடுத்த நிமிடம் ‘கம்' மென்ற மல்லிகை மணம் அவன் கவனத்தைக் கவர்ந்தது. அத்துடன் புத்தம் புதுப் பட்டாடை கட்டி நடப்பதனால் உண்டாகும் சலக், சலக் என்ற சத்தமும் அவன் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தான்; சாட்டை போன்ற சடையை முகத்தின் முன்னால் எடுத்துப் போட்டுக் கொண்டு, முல்லையின் முறுவலுடன் லாவகமாக நடந்து வந்தாள் ஸ்ரீமதி ஹரி.

"இவளும் பெண்தானே, பார்ப்பதற்கு எவ்வளவு லட்சணமா யிருக்கிறாள்!” என்று தனக்குள் எண்ணி ஏங்கினான் நாராயணமூர்த்தி.