பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மனக் குறை

159

நாராயணமூர்த்தியும் இயற்கையாகவே அழுதுவடியும் முகத்தை இன்னும் அதிகமாக அழுது வடிய வைத்துக் கொண்டு, பின்னால் ஏறிக்கொண்டான். மோட்டார் சைக்கிளும் காற்றாய் பறந்தது.

வழியெல்லாம் ஹரிகிருஷ்ணன் வளவள என்று நாராயணமூர்த்தியிடம் என்னவெல்லாமோ பேசிக்கொண்டு வந்தான். அவையெல்லாம் அவனுடைய காதில் விழவேயில்லை. அவன் மனமெல்லாம் குமுதத்தையும் அவளுடைய அப்பாவையும் சபிப்பதிலேயோடுபட்டிருந்தது. ஆபீஸில் தன்னைக் கொண்டு வந்து சேர்த்த ஹரிகிருஷ்ணனுக்கு தாங்ஸ் என்று ஒரு வார்த்தை சொல்லக்கூட அவனுடைய ஆத்திரம் இடம் கொடுக்கவில்லை. வாடிய முகத்துடனும், வேதனை நிறைந்த உள்ளத்துடனும் அன்று எப்படியோ வேலையைக் கவனித்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தான்.

"இன்றைக்கு விறகு வாங்க வேண்டுமே, காசு கொடுக்காமல் போய் விட்டீர்களே" என்றாள் குமுதம்.

அவ்வளவுதான்; "விறகுதானே வேண்டும்" என்று சொல்லி, ஏற்கெனவே ஒரு கால் ஒடிந்து கிடந்த ஈஸிசேரைத் தூக்கி அவளுக்கு முன்னால் விட்டெறிந்தான் நாராயணமூர்த்தி.

அது அக்கு வேறு, ஆணிவேறாக உடைந்து விழுந்தது. அத்துடன் குமுதத்தின் உள்ளமும் சுக்குநூறாக உடைந்தது.

"என்னை ஏன் இப்படியெல்லாம் வதைக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொல்லி விடுங்களேன், நாளைக்கே நான் இந்த வீட்டை விட்டுப் போய் விடுகிறேன்" என்றாள் அழுகையும் ஆத்திரமும் கலந்த குரலில்.

"அட, சனியனே! நீ மட்டுமா போகப் போகிறாய்? உன்னுடன் கொண்டுவந்த வெள்ளிப் பாத்திரங்கள், மரச்சாமான்கள், ரேடியோ, மோட்டார் சைக்கிள், வீடுவாசல் கையோடு எடுத்துக் கொண்டு போ!" என்று ஸ்ரீமதி ஹரியை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அவளைப் பரிகாசம் செய்தான் நாராயணமூர்த்தி.

"பிறத்தியார் சொத்துக்கு ஏன் இப்படி வாயைப் பிளக்கிறீர்களோ, தெரியவில்லையே! உங்களுடைய கையால் ஒன்றுமே ஆகாதா? என்னைப் போல் பிறந்தகத்திலிருந்து ஒன்றுமே யில்லாமல் வந்த எத்தனையோ பெண்கள் இன்று புக்ககத்தில் என்னைவிட மேலாக வாழவில்லையா? கைப்பிடித்த கணவனின்