பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

விந்தன் கதைகள்

மூலமாகவே எல்லா விதமான சுக போகங்களையும் அடையவில்லையா? ஹரிகிருஷ்ணனுக்கு அவருடைய வேட்டகத்தாரிடமிருந்து எல்லாம் கிடைக்கிற தென்று நீங்கள் ஆத்திரப் படுகிறீர்களே, அடுத்த வீட்டு அமிர்தத்துக்கு அவள் அகமுடையான் வீட்டிலிருந்தே எல்லாம் கிடைத்து வருகிறதே, அதற்காக நானும் வேண்டுமானால் உங்களைப்போல் ஆத்திரப்படக் கூடாதா? 'எனக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று எந்த நேரமும் உங்களை நச்சரிக்கக் கூடாதா? வேட்டகத்தாரிடமிருந்து ஒன்றும் கிடைக்கவில்லையே என்று உங்களுக்கு இருக்கும் மனக் குறைபோல, புக்ககத்தாரிடமிருந்து ஒன்றும் கிடைக்க வில்லையே என்ற மனக் குறை எனக்கும் இருக்காதா?" என்று அத்தனை நாளும் தன் அகத்தில் அடக்கி வைத்துக் கொண்டிருந்த ஆத்திரத்தையெல்லாம் அள்ளி அள்ளிக் கொட்டிக் கொண்டே போனாள் குமுதம்.

அவள் வாயைப் பார்த்தபடியே தன் வாயைப் பிளந்து கொண்டு நின்றான் நாராயணமூர்த்தி.

அத்தனை நாளும் அவனுடைய உள்ளத்தில் உதயமாகாத ஒரு உண்மை ஒன்று உதயமாயிற்று.

"மனக் குறை என்பது ஆணுக்கு மட்டும் அல்ல; பெண்ணுக்கும் உண்டு" என்பதை அவன் அன்றே உணர்ந்தான்.

அவ்வளவுதான்; அவனுடைய மனம் மாறி விட்டது. “குமுதம்! நீ கொடுத்து வைக்காதவள்" என்றான் நாத் தழுதழுக்க.

"நீங்களும்தான்!” என்றாள் குமுதம், கண்ணிரைத் துடைத்துக் கொண்டே.