பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேற்றுவார் யார்?

பணத்தை வீணாக்காதீர்கள்; "நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட்”டுகளை வாங்கி, பத்து ரூபாய்க்குப் பதினைந்து ரூபாயாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு பெற்றுக் கொள்ளுங்கள்!" என்னும் சர்க்கார் விளம்பரத்தைப் படிக்கும் போதெல்லாம் எங்கள் ஊர் உத்தமநாத நாயுடுகாருக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும். "ஆஹா ஏமி தயாளச் சிந்த எந்த பரோபகாரமும்" என்று அவர் தமக்குள் எண்ணிக் கொள்வார்.

பத்து ரூபாய்க்குப் பத்து வருடங்களில் அறுநூறு ரூபாய் வட்டி வாங்கும் அவருக்கு, சர்க்கார் கொடுக்கும் ஐந்து ரூபாய் வட்டியை நினைத்தால் சிரிக்காமலிருக்க முடியுமா?

உலகத்துக்கெல்லாம் ஒரு காலண்டர் என்றால், எங்கள் ஊர் உத்தமநாத நாயுடுகாருக்கு மட்டும் தனிக் காலண்டர் அவருடைய காலண்டரில் வருஷம் பன்னிரண்டு மாதமும் முப்பத்திரண்டு நாட்கள்தான்; கூடுதலோ குறைச்சலோ ஒன்றும் கிடையவே கிடையாது!

பொழுது விடிந்தால் இந்த அங்காடிக் கூடைக்காரர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வந்து நாயுடுகாருவின் வீட்டை வெல்லத்தில் ஈ மொய்ப்பதுபோல் மொய்த்துக் கொள்ளுவார்கள். அன்றைக்குத் தாங்கள் செய்யப் போகும் வியாபாரத்துக்கு முதலாக அவரிடமிருந்து ஆளுக்கு ஐந்து, பத்து என்று வாங்கிக் கொண்டு போவார்கள். சாயந்திரமானால் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனவர்கள். ரூபாய்க்குக் காலணாவீதம் ஒன்றே காலணாவட்டியும் அசலில் இரண்டரை அணாவுமாகச் சேர்த்தும் பத்து ரூபாய் வாங்கியவர்கள் வட்டி இரண்டரை அனாவும் அசலில் ஐந்தனாவுமாகச் சேர்த்தும் கொண்டு வந்து கொடுத்துவிடவேண்டும். முப்பத்திரண்டு நாட்கள் இவ்வாறு கொடுத்து வாங்கும் கடனை அடைத்த பிறகு மீண்டும் வந்து வழக்கம்போல் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு போகலாம். தினசரி தங்கள் வியாபாரத்தில் அவர்களுக்கு லாபம் வந்தாலும் சரி, வராமல் போனாலும் சரி-மேற் கூறிய சட்ட திட்டங்களை ஒருவரும்-ஒரு நாளும் மீறவே கூடாது. தவறினால் தலை போனாலும் பரவாயில்லையே-'கவலை விட்டது!’ என்று அந்த அங்காடிக்

வி.க. -11