பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தேற்றுவார் யார்

163

"என்ன, ஒரு சொல்லு சொன்னா ஒரேயடியா இப்படிக் கோவிச்சுக்கிறயே? யாருக்காக நீ சாயந்திரத்துக்குள்ளே 'தண்டல்’ கட்டப் போறே? உன் அப்பனுக்கு அழுது கொண்டு கட்ட வேணாம்?”

அம்மாயிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "என்னை இன்னொரு தரம் இப்படியெல்லாம் சொல்லாதீங்க, சாமி! உங்கக்கிட்ட நான் ஒரு அஞ்சு ரூவா கடன் வாங்கறதுக்காவ நீங்க வேறே எனக்கு அப்பாவா இருக்க வேண்டியதில்லை" என்றாள் அழுகையும் ஆத்திரமும் கலந்த குரலில்.

நாயுடுகாருக்குச் சுருக்கென்றது. ஆனாலும் அதை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இந்தச் சின்ன விஷயத்துக்காக அவர் ஒரு வாடிக்கைக்காரியை இழந்துவிட முடியுமா? ஆகவே மேலுக்குச் சிரித்துக் கொண்டே, "அதற்குச் சொல்லவில்லை, அம்மாயி. சும்மாநீ எப்படி இருக்கிறேன்னு பார்த்தேன் அடே யப்பா நீ இவ்வளவு ரோசக்காரி என்று எனக்கு இப்போதுதான் தெரிந்தது!” என்று சொல்லிக் கொண்டே ஐந்து ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

அதை அடக்க ஒடுக்கத்துடன் வாங்கி முந்தானையில் முடிந்து கொண்டு, "நான் போய்ட்டு வரேன், சாமி!" என்று அம்மாயி தலைகுனிந்த வண்ணம் போய்விட்டாள்.

* * *

அன்று கிடங்குத் தெருவிலிருந்த எல்லாக் கடைகளிலும் ஒரே மாம்பழக் குவியலா யிருந்தது. என்னதான் பழங்கள் வந்து குவிந்திருந்தாலும் விலை என்னமோ ஏகக் கிராக்கிதான். நல்ல பழங்கள் நூறு பத்து ரூபாய்க்குக் குறையவில்லை. கொஞ்சம் வெம்பியும் அழுகியும் இருந்த பழங்கள் நூறு ஐந்து ரூபாய்க்குக் கிடைத்தன.

"என்னத்தை வாங்கி விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?” என்ற சிந்தனையில் அம்மாயி நெடு நேரமாக ஈடுபட்டிருந்தாள். கடைசியாக, நூறு ஐந்து ரூபாய்க்கு விற்கும் அந்த அழுகல் மாம்பழங்களின் மேல்தான் அவள் கவனம் சென்றது. கைவசம் அப்போது இருந்ததும் ஐந்து ரூபாய்தானே? ஆகவே அதற்குமேல் அவளுடைய யோசனை ஓடவில்லை.

அந்தப் பழத்தை வாங்கி ஒன்று ஓரணா என்று விற்றாலும் ஒன்றேகால் ரூபாய் லாபம் கிடைக்கும். "அங்கே நிற்காதே; இங்கே