பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

விந்தன் கதைகள்

உட்காராதே!" என்று அடிக்கடி வந்து மிரட்டும் போலீஸ்காரர்களுக்கு நாலணா தண்டக் காசு அழுதாலும்கூட ஒரு ரூபாய் கட்டாயம் மிஞ்சும். ஊராரில் சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பலூன் வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்துவிடுகிறார்கள், அதைப் பார்த்துவிட்டு நம் குழந்தைகளும் தங்களுக்குப் பலூன் வாங்கித் தர வேண்டும் என்று இரண்டு மூன்று நாட்களாய் ஒற்றைக் காலால் நின்று தொலைக்கின்றன. நம்முடைய நிலைமை அந்தக் குழந்தைகளுக்குத் தெரிகிறதா, என்ன? நாமும் எத்தனை நாளைக்குத் தான் அவற்றை ஏமாற்றிக்கொண்டு வருவது? இன்றைக்கு எப்படியாவது இரண்டனா கொடுத்து இரண்டு பலூன்களை வாங்கிக் கொண்டுபோய்க் குழந்தைகளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்புறம் பதினாலணா மீதி இருக்கும். அந்த தர்மராஜா நாயுடுவுக்கு அசலில் இரண்டறையனாவும் வட்டி ஒன்றேகாலணாவும் கொடுத்துவிட்டால் பத்தே காலனாதான் கடைசியில் மிச்சமாகும். அதிலும் வெற்றிலை பாக்கு, புகையிலைக்கு ஓரனா போனால் பாக்கி ஒன்பதே காலணாதான்-இவ்வளவு போதாதா, ராத்திரி சாப்பாட்டுக்கு?-இப்படியெல்லாம் என்னவெல்லாமோ எண்ணித் தனக்குள் சமாதானம் செய்துகொண்டே அருகிலிருந்த ஒரு கடைக்காரனிடம் ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி, "ஐயா இந்தப் பழத்தில் எனக்கு நூறு போடுங்க!" என்று சொல்லிக்கொண்டே கையோடு கொண்டு வந்திருந்த கூடையைக் கீழே வைத்தாள்.

உடனே அவன் கைக்கு ஐந்து பழங்களாக எடுத்து, “ஒண்ணு, ஒண்ணு, ஒண்ணு"...... ரெண்டு, ரெண்டு, ரெண்டு என்று ஏதோ ஒரு தினுசாக ராகம் இழுத்துப் பாடிய வண்ணம் எண்ணிப் போட்டான். பதினெட்டாவது ‘கை’ போடும்போதே, தினசரி எத்தனையோ பேரை ஏமாற்றி ஏமாற்றிப் பழகிப் போயிருந்த அவனுடைய வாய், “இருபது, இருபது.....’ என்று மங்களம் பாடி முடித்து விட்டது!

பாவம், தான் போட்ட லாபக் கணக்கில் அந்தக் கடைக்காரனின் கைங்கரியத்தால் பத்தணாகுறைந்து போனதை அவள் அறியவில்லை; துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் பகவானும் பிரசன்னமாகி அவளுக்கு நீதி வழங்கவில்லை.

* * *

"மாம்பழம், மாம்பழம்!" என்று கூவிக்கொண்டே தெருத் தெருவாக நடந்தாள் அம்மாயி. பஸ்ஸுக்காக வழிநடைப் பாதையில் காத்திருந்த ஒருத்தி, “ஏ, மாம்பழம்" என்று அவளைக் கூப்பிட்டாள்.