பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

விந்தன் கதைகள்

இருந்தாலும் அவர்கள் சளைக்கவில்லை; "வெற்றி நமதே" என்று கோஷித்துக் கொண்டு வீதியெல்லாம் சுற்றிச் சுற்றி வந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு கோஷமிடுவதற்கும் அவர்கள் ஏதாவது சாப்பிட வேண்டியிருந்தது; அதற்காகத் தங்கள் உடம்பையும் உயிரையும் பணயம் வைத்து உழைக்கவேண்டியிருந்தது. இதை நினைத்துத்தான் மன்னார்குடி மாணிக்கம் மெளனம் சாதித்து வந்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை; அவர்களுடைய ‘சரணாகதி'யை எதிர்பார்த்துத் தமக்குள் சிரித்துக் கொண்டுமிருந்தார்!

இந்தச் சிரிப்பைச்சின்னப்பன் பொருட்படுத்தாமலிருப்பதற்குச் செல்லம் துணை புரிந்தாள். அதாவது, வேலை நிறுத்தம் ஆரம்பமானதும் அவள் அந்த ஊர்ப் பெரிய மனிதர் வீடு ஒன்றில் வேலைக்கு அமர்ந்தாள். காலையில் வீடு வாசலைப் பெருக்கிச் சாணம் தெளித்துக் கோலமிடுவது. பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, காலைச் சிற்றுண்டிக்கு மாவு அரைத்துக் கொடுப்பது முதலியவைதான் அவளுடைய வேலைகள். இந்தப் பிரமாத வேலைக்கு மாதம் பிறந்தால்களைசுளையாக ஐந்து ரூபாய் சம்பளம். அத்துடன் மத்தியான வேளையில் ஏதாவது சாதம், குழம்பு மீதமானால், அவை பிச்சைக்காரனுக்கு அல்ல; அவளுக்குத்தான்

மத்தியானம் மட்டுமா இந்தச் சலுகை? இரவில் ஏதாவது கறி வகைகள் மிஞ்சி மறுநாள் காலை அவை கெட்டுப்போனால் செல்லத்துக்கு அடித்ததுயோகம் அந்தக் கறி வகைகள் அத்தனையும் குப்பைத் தொட்டிக்கா என்கிறீர்கள்?-இல்லை, இல்லை; செல்லத்தின் வயிற்றுக்குத்தான் செல்லத்துக்கு அடித்து வந்த இந்த யோகம், கடந்த இரண்டு மாத காலமாகச் சின்னப்பனுக்கும் அடித்து வந்தது. அதன் பயனாக அவளுடைய உயிர் மட்டும் அல்ல; அவனுடைய உயிரும் உடம்பில் ஊசலாடிக் கொண்டிருந்தது. இருவரும் உயிருள்ள பிணங்களைப் போல ஊரில் நடமாடிக் கொண்டிருந்தனர்!

அன்று மத்தியானம் 'அலைந்தது மிச்சம்’ என்று அய்யர் வீட்டுச் சோற்றை எதிர்பார்த்தவனாய்ச்சின்னப்பன் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட்டான். வந்தவன் தட்டியை அவிழ்க்கவும் இல்லை; குடிசைக்குள் நுழையவுமில்லை. வாசலிலேயே நின்று அவளுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றான்.

நின்றான். நின்றான், நின்றான்-நின்று கொண்டேயிருந்தான்.