பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

விந்தன் கதைகள்

"உற்பத்தியைக் குறைக்காம இருப்பதற்கு உழைக்கிறவனுங்க உடம்பிலே கொஞ்சமாச்சும் தெம்பு இருக்க வேணாமா? அதுக்குக் கொஞ்சம் சம்பளத்தை ஒசத்திப் போட்டால் என்னவாம்?”

“எப்படி ஒசத்தறது? உற்பத்தியைப் பெருக்குனாத்தானே முதலாளிக்கு லாபம் அதிகமா வரும். அவரும் சந்தோசமா சம்பளத்தை ஒசத்திப் போடுவாரு-இது தெரியாம இத்தனை நாளா நாங்களும் இந்த ஸ்ட்ரைக்கைக் கட்டிகிட்டு அழுதோமே!” என்று சொல்லித் தன் அடி வயிற்றில் லேசாக அடித்துக் கொண்டான் சின்னப்பன்.

"அப்படியா சங்கதி? அப்படின்னா நீங்க இப்போ என்ன தீர்மானம் பண்ணியிருக்கீங்க?" என்று கேட்டாள் செல்லம்.

“தீர்மானம் என்ன? நாளையிலேருந்து எல்லோரும் பழையபடி வேலைக்குப் போகப் போறோம்!” என்று சின்னப்பன் சொன்னான்.

"இதுக்குத்தானா இம்புட்டு நாளா ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தீங்க" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே செல்லம் முகவாய்க் கட்டையில் கையை வைத்துக் கொண்டாள்.

“எல்லாம் பட்டாத்தானே தெரியும்" என்று அலுத்துக் கொண்டு கீழே உட்கார்ந்தான், கடமையை உணர்ந்து உரிமையை மறந்த சின்னப்பன்.

"நல்லகூத்து, போங்க!" என்று சொல்லிக் கொண்டே, செல்லம் தன் மடியிலிருந்து ஒரு பிடி வேர்க்கடலையை எடுத்து அவனுக்கு எதிரே கலகல வென்று போட்டாள்.

"ராத்திரிக்காச்சும் கஞ்சிகிஞ்சி காய்ச்சலையா" என்று சின்னப்பன் ஒப்பாரி வைத்தான்.

"இந்தாங்க, காய்ச்சாத கஞ்சி" என்று சொல்லி, ஒரு குவளை நிறையக் குளிர்ந்த நீரை எடுத்து வந்து அவனுக்கு எதிரே வைத்து விட்டுச் சிரித்தாள் செல்லம்.

* * *

எழுபது நாட்களுக்குப் பிறகு, எம். எம். மாட்ச் பாக்டரியில் மீண்டும் வேலை தொடங்கிற்று. முன்னெல்லாம் மாலை ஐந்தரை மணி மட்டும் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள், இப்பொழுது இரவு ஒன்பது மணி வரை செய்ய ஆரம்பித்தனர்.