பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

விந்தன் கதைகள்

அவர்தான் என்ன செய்வார், பாவம் நிலைமை லாபத்தில் நஷ்டம் வரும் அளவுக்கு வந்து விட்டபோது, அவர்பேசாமல் இருக்க முடியுமா?

இருந்தாலும், இதைப் பற்றிப் பட்டணத்துத் தலைவர் வந்து ஏதாவது சொல்வார் என்று ‘எம். எம். மாட்ச்பாக்டரி' தொழிலாளிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அந்தப் பக்கம் வரவும் இல்லை; ஒன்றும் சொல்லவும் இல்லை!

* * *

அன்று காலை வேலைக்குப் புறப்படும்போது, “செல்வம், நாலு பேரைப் போல நாமும் நல்லாயிருக்கிறதுக்கு இருபத்து நாலு மணி நேரம் வேனுமானாலும் நான் வேலை செய்யலாம்னு எண்ணியிருந்தேன்; அதுக்கும் இனிமேல் வழியில்லாமல் போச்சு" என்றான் சின்னப்பன்.

"ஏன்?” என்று கேட்டாள் செல்லம்.

"தீப்பெட்டி ஸ்டாக் ஏராளமா இருக்குதாம். அதுக்காக இனிமேல் ராத்திரியிலே வேலை இல்லைன்னு எசமான் சொல்லிட்டாரு!”

"அப்ப்டின்னா இனிமேல் பழைய சம்பளம்தான் கிடைக்கும்னு சொல்லுங்க!”

“ஆமாம்."

"தொலையறது. ஏதோ கிடைச்சவரை திருப்தியடைய வேண்டியதுதானே?" என்றாள் செல்லம்.

“வேறே என்ன செய்யறது? நாம் அம்புட்டுத்தான் கொடுத்து வச்சிருக்கோம் நான் போய்வாரேன்" என்று சொல்லிவிட்டுப் போனான் சின்னப்பன்.

அவனை வாசல் வரை வந்து வழியனுப்பிவிட்டு, செல்லம் வீட்டுக் காரியங்களில் ஈடுபட்டாள்.

அடுப்பை மூட்டி உலை வைத்துவிட்டு அவள் அரிசியைக் கழுவிக் கொண்டிருந்த சமயத்தில், சின்னப்பன் எதிர்பாராத விதமாக தளர்நடை நடந்து வந்து அவளுக்கு எதிரே நின்றான்.