பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கைமேல் பலன்

175

"என்னங்க, என்ன உடம்புக்கு லீவு கீவு போட்டுட்டு வந்துட்டீங்களா?" என்று கேட்டுக் கொண்டே, அவனைத் தலைநிமிர்ந்து பார்த்தாள் செல்லம்.

அவன் ஒன்றும் சொல்லாமல் விசித்து விசித்து அழுதான். செல்லம் திடுக்கிட்டு எழுந்து நின்று, "என்னங்க, என்ன? விசயத்தைச் சொல்லுங்களேன்" என்று பரபரப்புடன் கேட்டாள்.

அதற்கும் அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் மீண்டும் விம்மி விம்மி அழுதான்.

“ஐயோ இதென்ன, பொம்மனாட்டி மாதிரி இப்படித் தேம்பித் தேம்பி அழறீங்களே!-ஏதாச்சும் தப்புத் தண்டா செய்து விட்டுப் போலீசிலே கீலிசிலே மாட்டிக்கிட்டீங்களா, என்ன?" என்று கவலையுடன் கேட்டாள் செல்லம்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, செல்லம் இனிமேல் நாம் எப்படிப் பிழைக்கப் போறோம்னுதான் எனக்குத் தெரியலே" என்று விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையே ஆரம்பித்தான் சின்னப்பன்.

"பிழைச்சாப் புழைக்கிறோம், செத்தாச் சாகிறோம்-முதல்லே விசயம் என்னான்னு சொல்லித் தொலையுங்க!" என்று செல்லம் கத்தினாள்.

“ஆமாம், செல்லம்! நீ சொல்றது சரிதான் நாம் செத்தால் சாகிறோம், பிழைச்சாப் பிழைக்கிறோம்னுதான் எங்க முதலாளியும் நினைச்சுப்பிட்டாரு! அவரு உற்பத்தியைக் குறைக்கணும்னு இன்னிக்கு ஐம்பது பேரை வீட்டுக்கு அனுப்பி வைச்சுட்டாரு! அவர்களிலே நானும் ஒருத்தன்" என்று சின்னப்பன் விஷயத்தை ஒருவாறு சொல்லி முடித்தான்.

அவ்வளவுதான்; செல்லம் ஏனோ குபிர் என்று சிரித்தாள்!

சின்னப்பன் அழுகையை நிறுத்தி விட்டு அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

"கவலை வேணாம், போங்க பட்டணத்துத் தலைவர் சொன்னபடி உற்பத்தியைப் பெருக்கினிங்க, கைமேல் பலன் கிடைச்சது அம்புட்டுத்தானே?" என்று சொல்லி விட்டு, அவள் மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டே இருந்தாள்.