பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கருவேப்பிலைக்காரி

177

ஆகவே, “இதோ வந்து விட்டேன்" என்று எல்லாவற்றையும் ஆவி பறக்கப் பறக்க எடுத்துக் கொண்டு கூடத்தை நோக்கி ஓட்டமாய் ஒடுவேன். அவர் தம்முடைய காரியங்களை யெல்லாம் முடித்துக் கொண்டு, நைவேத்தியத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கல்லுப் பிள்ளையாரைப் போல் உட்கார்ந்திருப்பார். இலையைப் போட்டு எல்லாவற்றையும் பரிமாறிய பிறகு, நிமிர்ந்து நின்று எரியும் கையை வாயால் ஊதி ஊதித் தணிக்கப் பார்ப்பேன். அதற்காக அவர் “ஐயோ, பாவம்" என்று பச்சாதாபப் படுவார் என்கிறீர்களா? அதுதான் கிடையாது. "அவ்வளவு அஜாக்கிரதை" என்று கடிந்து கொள்வார்!

இன்று நான் விழித்த வேளை நல்ல வேளை போலிருக்கிறது. மேற்கூறிய விபத்து எதுவும் இன்று எனக்கு நேரவில்லை; குழந்தை ராதையும் மணி பத்துக்கு மேலாகியும் தொட்டிலை விட்டுக் கீழே இறங்கவில்லை. அவள் தன் பாட்டுக்குத் தொட்டிலுக்கு மேலே கட்டித் தொங்கும் பறக்கும் கிளிப் பாவையுடன் ஏதோ ‘ங்கா' பாஷையில் பேசிக் கொண்டிருக்கிறாள்.

அப்பப்பா சில சமயம் அவள் தன் ‘ங்கா' பாஷையைக் கை விட்டுவிட்டு, ‘குவா, குவா என்ற பாஷையில் கத்த ஆரம்பித்து விட்டால் 'போதும், போதும்' என்று ஆகி விடுகிறது. இம்மாதிரி சமயங்களில் அடுப்புக் காரியமும் ஆகவேண்டியிருந்தால், 'குழந்தை வேண்டாம்’ என்று தீர்த்த யாத்திரை போவதற்கு ஏதாவது கோயிலோ, குளமோ இருக்காதா என்று தோன்றி விடுகிறது

நானும் குழந்தை பிறந்ததிலிருந்துதான் அவரிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன், "வீட்டில் இருப்பது நான் ஒருத்தி; அழுகிற குழந்தையை வைத்துக் கொண்டு என்னால் உங்கள் அவசரத்துக்குச் சமைத்துப் போட முடியாது. அதைத் துக்கி வைத்துக் கொண்டிருக்க யாராவது ஓர் ஆளைப் போடுங்கோ" என்று. அவர் எங்கே அதைக் காதில் வாங்கிக் கொள்கிறார்:

"எனக்குக் கிடைப்பதோ மாதம் தொண்ணுற்றைந்து ரூபாய். அதில் ஐந்தே ஐந்து ரூபாயை என் செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி தொண்ணுறு ரூபாயை உன்னிடமே கொடுத்து விடுகிறேன். நீயோ அதுவே செலவுக்குப் போத வில்லையென்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிகிறாய் முடியுமானால், நீ அதற்குள்ளேயே குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதற்காக ஒரு வேலைக்காரியைப் பார்த்து வைத்துக் கொள்ளேன்; நானாவேண்டாம் என்கிறேன்!” என்று சொல்லி அவர்தம் பொறுப்பைத்தட்டிக் கழித்து விடுகிறார்.

வி.க. -12