பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கருவேப்பிலைக்காரி

179

என்னால் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்று! "நான் தான் ஐந்தே ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு பாக்கியை அப்படியே உன்னிடம் கொடுத்து விடுகிறேனே, இன்னும் என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்?" என்று அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரன் மாதிரி அலுத்துக் கொண்டாரே, அவர் சாயந்திரம் வரட்டும்; அவரை என்ன பாடு படுத்தி வைக்கிறேன் பார் என்றேன் நான் ஆத்திரத்துடன்.

"நன்றாய்ப் படுத்து! இந்தப் புருஷர்களே இப்படித் தான்! சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. நிஜமாகவே இவர்கள் இருவருக்கும் நூறு ரூபாய்தான் சம்பளம் கிடைக்கிறதோ, இல்லை-அதற்கு மேல்தான் கிடைக்கிறதோ-யார் கண்டது?" என்று மேலும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டாள் அவள்.

என்னையும் மீறிவந்த ஆத்திரத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு. "என்னமோ, எல்லாம் அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும்!" என்றேன் நான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, "போய் வருகிறேன்" என்று சொல்லி விட்டு அவள் கிளம்பினாள்.

அதற்குள் குழந்தை ராதையும் நல்ல வேளையாகத் தூங்கி விட்டாள். அவளைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, நான் அம்புஜத்துடன் வாசல் வரை சென்றேன்.

கருவேப்பிலைக்காரி வந்தாள். அவளை அழைத்துத் திண்ணை யண்டை விட்டுவிட்டு, நான் உள்ளே சென்றேன் ஒரு பிடி அரிசி கொண்டு வருவதற்காக.

தனிக் குடித்தனம் செய்வதில் செளகரியம் இருந்தாலும், அசெளகரியமும் இல்லாமற் போகவில்லை. தினந்தோறும் கடைக்குப் போய்வர அவருக்குச் செளகரியப் படுகிறதா, என்ன? அவர்கடைக்குப் போய்வரமுடியாத நாட்களில் எனக்குத் தெருவோடு போகும் அங்காடிக் கூடைக்காரர்களை விட்டால் வேறு வழியே கிடையாது.

* * *

", அம்மா நேரமாவுது, அம்மா, சீக்கிரம் வா. அம்மா!" என்றாள் கருவேப்பிலைக்காரி.