பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

விந்தன் கதைகள்

தென்னமோ தெரியவில்லை, அன்று முழுவதும் அந்தக் கருவேப்பிலைக்காரியை என்னால் மறக்கவே முடியவில்லை. "உங்களோடு என்னையும் சேர்த்துப் பேசமுடியுமா, அம்மா?" என்ற அவளுடைய கேள்வி என் மனதை விட்டு அகலவே யில்லை.

ஆமாம், அவளோடு என்னையும் சேர்த்து ஏன் பேசக் கூடாது? ஜாதியில் வேண்டுமானால் உயர்வு தாழ்வு இருக்கலாம்; வாழ்வில் வேண்டுமானால் உயர்வு தாழ்வு இருக்கலாம். பிறப்பிலே..... ? நானுந்தான் பெண்ணாய்ப் பிறந்தேன்; அவளுத்தான் பெண்ணாய்ப் பிறந்திருக்கிறாள்.

ஆயினும் மனோபாவத்தில் அவளுக்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்!

அவனால் அவளுக்கு ஒரு காலணாவுக்கு வழி கிடையாது; திருடிவிட்டு ஜெயிலுக்குப் போவான்; வீட்டில் சும்மா இருக்கும் அவன் அந்தக் குழந்தையைக் கூடத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க மாட்டான்; அதையும் நாளெல்லாம் அவள் முதுகில் சுமந்துகொண்டு திரிய வேண்டும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இவள் சம்பாதித்து எடுத்துக்கொண்டு போய் அவனுக்குச் சூதாடக் கொடுக்க வேண்டும்; அதுவும் அவசர அவசரமாக இல்லையென்றால் அவன் அவளை அடித்துக் கொன்று விடுவான். இதை யெல்லாவற்றையும் விட, தான் சம்பாதித்த அரிசியில் தானே கொஞ்சம் திருடி எடுத்துக் கொண்டு போய்ச்சமைத்து, தானும் சாப்பிட்டு அவனுக்கும் கொஞ்சம் எடுத்து வைப்பது போன்ற கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இந்த அழகான வாழ்க்கையில் அவனிடம் இவளுக்கு என்ன பயபக்தி!

என்ன இருந்தாலும் அவன் இவளைத் தொட்டுத் தாலி கட்டிய புருஷனாம்! அவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசக் கூடாதாமே!

பாவம், தீராத வியாதிக்கு ஆளாகியிருந்தும் வேசி வீட்டுக்குப் போக ஆசைப்பட்ட அயோக்கியனைக் கூடையில் வைத்துச் சுமந்து கொண்டு சென்ற பைத்தியக்காரி நளாயினியின் கட்டுக் கதையைக் கேட்டு ஏமாந்தவர்கள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இல்லையா? அவர்களில் இந்தக் கருவேப்பிலைக்காரியும் ஒருத்தி போலிருக்கிறது!