பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கருவேப்பிலைக்காரி

183


அப்பப்பா! அவளுடைய துரதிர்ஷ்டத்தைப் பார்க்கும் போது என்னுடைய அதிர்ஷ்டம் எவ்வளவோ தேவலை போலிருக்கிறதே!

ஐந்து ரூபாய்!-ஆம், ஐந்தே ஐந்து ரூபாய்-அதையும் எனக்குத் தெரிந்து எடுத்துக் கொள்ள அவருக்குத் தைரியமில்லை. எனக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்வதற்காக இத்தனை நாளும் அவர் என்னிடம் பொய் சொல்லி வந்திருக்கிறார்-எனக்குப் பயந்துதான்; ஆம், என்னுடைய வாய்க்குப் பயந்துதான்!

"அழுகிற பிள்ளைய வைத்துக் கொண்டு அடுப்புக் காரியத்தையும் என்னால் கவனிக்க முடியாது!" என்று நான் அடித்துச் சொல்லும்போதுகூட, அவர் அந்தக் கருவேப்பிலைக்காரியின் கணவனைப் போல "அதைவிட நீ என்ன வேலை செய்து கிழித்து விடுகிறாய்?” என்று என்னை எதிர்த்துக் கேட்பதில்லை.

"என் செலவுக்கு எடுத்துக் கொண்டது போக மீதியைத்தான் உன்னிடம் கொடுத்து விடுகிறேனே, முடியுமானால் ஆள் வைத்துக் கொள்ளேன்!” என்று அடக்கத்துடன் தான் பதில் சொல்லுகிறார். ஆனால் மறைமுகமாக, “என்னுடைய செலவுக்கு மேற்கொண்டு ஐந்து ரூபாய் தேவையாயிருக்கிறது! உனக்குத் தெரிந்தால் எரிந்து விழுவாயே என்று தெரியாமலே எடுத்துக்கொண்டு விடுகிறேன்!” என்று இத்தனை நாளும் அவர் என்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்!

அப்படித்தான் எடுத்துக் கொள்கிறாரே, அதையாவது தன் சொந்த உபயோகத்துக்காகச் செலவழித்துக் கொள்கிறாரா என்று எண்ணிப் பார்த்தால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அடிக்கடி எனக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து என்னைத் திருப்திப் படுத்த முயலுகிறாரே, அதற்கு வேண்டிய காசு அவருக்கு எங்கிருந்து வரும்? இப்படி ஏதாவது எடுத்துக் கொண்டால்தானே உண்டு? ஒரு நாளாவதுஇதைப் பற்றி நான் யோசித்துப் பார்த்தேனா?

அப்பாவி மனுஷர், பாவம் உண்மை தெரியாமல், "சாயந்திரம் வரட்டும், அவரை என்ன பாடு படுத்தி வைக்கிறேன். பார்!" என்று அம்புஜத்திடம் சொன்னோமே, இது நியாயமா?

இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த எனக்குப் பொழுது போனதே தெரியவில்லை. அவர் வரும் காலடிச்சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்.