பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

விந்தன் கதைகள்


ஏனோ தெரியவில்லை; அவரைக் கண்டதும் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாக நான் ‘களுக்' கென்று சிரித்து விட்டேன்.

"ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே, அவர் ஒன்றும் புரியாமல் தம்முடைய முகத்தை ஓடோடியும் சென்று கண்ணாடியில் பார்த்துக் கொண்டார்!

"முகத்தில் ஒன்றுமில்லை; அகத்தில்தான் இருக்கிறது!” என்று நான் அமுத்தலுடன் சொல்லிக்கொண்டே காப்பியைக் கொண்டு போய் அவருக்கு முன்னால் வைத்து விட்டு, "நிஜத்தைச் சொல்லுங்கள், உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?" என்று கேட்டேன்.

"இதென்ன கேள்வி, திடீரென்று?”

"சொல்லுங்களேன்!"

"ஏன், தொண்ணுற்றைந்து ரூபாய் தான்!"

"பொய், பொய்! எனக்குத் தெரியவே தெரியாது என்று நினைத்தீர்களா.....?”

"இல்லை, லலிதா எனக்குச் சம்பளம் என்னமோ நூறு ரூபாய்தான். ஆனால் உன்னிடம் உண்மையைச் சொன்னால்....”

"என்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன? நீங்கள் மேற்கொண்டு ஐந்து ரூபாய் எடுத்துக் கொள்வதை நான் வேண்டாம்!” என்றா சொல்லியிருக்கப் போகிறேன்? என்று ஒரு போடுபோட்டேன்.

அதை அப்படியே நம்பி, "உன்னுடைய மனசு இவ்வளவு தங்கமான மனசு என்று இதுவரை எனக்குத் தெரியாமலே போய்விட்டதே!” என்றார் அவர் உருக்கமுடன்.

அவர் சொல்லுகிறாரே, நீங்கள் சொல்லுங்கள்; அவர் நினைக்கிறபடி என்மனசு என்ன, அவ்வளவு தங்கமான மனசா?