பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

விந்தன் கதைகள்

கரையின் அழகைக் கெடுக்குதாம். அதுக்காவ யாரோ அஞ்சாறு பேர் வந்து எங்க குடிசைகளையெல்லாம் பிரிச்சுப் போட்டுட்டாங்க நாங்க என்ன செய்வோம், சாமி? எங்களுக்கு இருக்க இடமில்லை......."

"ஏன், உங்களுக்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுத்தார்களோ, இல்லையோ"

"கொடுக்காம என்ன, சாமி ஆளுக்குப் பத்து ரூவாக் காசு கொடுத்தாங்க.....!”

"பத்து ரூபாய்க் காசு கொடுக்காமல் உங்களுடைய பங்களாக்கள் ஒவ்வொன்றுக்கும் பத்து லட்சமா கொடுப்பார்கள்?”

"பத்து லட்சம் கேட்கலை, சாமி! 'அப்பாடி'ன்னு படுக்கப் பத்தடி இடந்தான் கேட்கிறோம். அதுக்கு இந்தப் பத்து ரூவாயை வச்சிக்கிட்டு நாங்க என்ன செய்வது, சாமி?”

"அதற்கு என்னை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள். ஊரிலே எந்த எழவு நடந்தாலும் அதற்கு இந்த அன்ன விசாரம்தானா பொறுப்பாளி போங்கடா, வேலையைப் பார்த்துக்கொண்டு!” என்று எரிந்து விழுந்தார் ஐயா.

"அப்படிச் சொல்லிப்பிட்டா எப்படி, சாமி கோடி வீட்டு ஐயா சொன்னாரு உங்கக்கிட்ட சொன்னா மேலிடத்திலே சொல்லி எங்களுக்காக ஏதாச்சும் செய்விங்கன்னு!"

"அவனுக்கும் வேலை கிடையாது; உங்களுக்கும் வேலை கிடையாது. நானும் உங்களைப் போலவா இருக்கிறேன்? எனக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது. நீங்கள் போய்த் தொலையுங்கள்!"

"வேலையோடு வேலையா இந்த ஏழைகளையும் கொஞ்சம் கவனிச்சிக்கிட்டா நீங்க நல்லாயிருப்பீங்க, சாமி!"

"இல்லாவிட்டால் கெட்டு விடுவேனாக்கும்! அட சனியன்களே! நீங்கள் மட்டுந்தானா ஏழைகள்? நாங்களுந்தான் ஏழைகள்!-முதலில் நீங்கள் இங்கிருந்து நடையைக் கட்டுங்கள்; அப்புறம் நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் கதவைப் 'படா' ரென்று சாத்திக் கொண்டு 'ஐயா' உள்ளே சென்று விட்டார்.