பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காரியவாதி

விருத்தாசலம் பாயில் படுத்துப் பத்துப் பதினைந்து நாட்களாகிவிட்டன. இதன் காரணமாக அவனுடைய மனைவியான பொன்னி கண்ணயர்ந்து ஒரு வாரகாலமாகி விட்டது. இந்த நிலையில் எந்த நேரமும் "என்னுடைய வயிற்றுக்கு வழி என்ன?" என்று அவர்களைப் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை.

இவர்களுக்கெல்லாம் கார்டியனாக இருந்தது ஒரே ஒரு கறவை மாடு. எஜமானும் எஜமானியும் தன்னை எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்கச் செய்தாலும், அது இயற்கையாகக் கிடைக்கும் புல் பூண்டுகள் மேய்ந்து விட்டு வந்து, வேளைக்கு உழக்குப் பாலையாவது கறந்து விடும். அந்தப் பாலிலிருந்து ஒரு பாலாடைகூடத் தன்னுடைய குழந்தைக் கென்று எடுத்துக் கொள்ள மாட்டாள் பொன்னி. ‘அதற்கென்ன கேடு! கத்தும்போது கொஞ்சம் சர்க்கரைத் தண்ணிரை ஊற்றி வைத்தால் போச்சு’ என்பது அவளுடைய எண்ணம்.

ஏன் தெரியுமா? விருத்தாசலம் பாயில் படுத்து விட்ட பிறகு அவர்களுடைய பிழைப்பே அந்தப் பாலில்தான் இருந்தது. அந்த உழக்குப் பாலுடன் அவள்பாவ புண்ணியத்தைக் கூடக் கவனிக்காமல் கொஞ்சம் தண்ணிரைச் சேர்த்து வீடு வீடாகச் சென்று விற்றுவிட்டு வருவாள் அப்படிச் செய்தால்தான் அவர்கள் தங்களுடைய வயிற்றுக் கவலையை ஒருவாறாவது தீர்த்துக் கொள்ள முடிந்தது. நியாயந்தானே? வயிற்றுக் கவலை இன்னதென்று அறியாதவர்களே பாவ புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்படாமலிருக்கும் பொழுது, பொன்னியைப் போன்றவர்கள் கவலைப்பட முடியுமா?

நோயின் வேகம் எவ்வளவுதான் அதிகரித்த போதிலும் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்னும் பழமொழியில்தான்வைத்திருந்த நம்பிக்கையைக் கடைசி வரையில் இழக்காமலே இருந்தான் விருத்தாசலம். அவனுடைய நிலையில், அவற்றைத் தவிர வேறு எதில்தான் அவன் நம்பிக்கை வைக்க முடியும்? கடைசியில் சுக்கும் அவனைக் காப்பாற்றவில்லை; சுப்ரமணியக் கடவுளும் காப்பாற்றவில்லை. நினைத்த போது எதிரே வந்து நின்றதற்காக எத்தனையோ பெரியோர்கள், "அப்பா உனக்கு ஆயுசு நூறு" என்று விருத்தாசலத்தை வாழ்த்தியிருந்தார்களே, அவர்களுடைய வாக்கும்