பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காரியவாதி

193

ஓரளவாவது பலிக்கவில்லை. முப்பதாவது வயதிலேயே அவனுடைய மூச்சு நின்றுவிட்டது.

பொன்னி புலம்பினாள்; ஒய்ந்தாள்.

* * *

பிறந்தகத்தில் பொன்னிக்கு அண்ணா ஒருவனும் அவனுடைய மனைவி மக்களும் இருந்தனர். சொத்து சுமாராக இருக்கத்தான் இருந்தது. பெற்றோர்கள் சம்பாதித்ததுதான். இருந்தும் என்னத்தைச் செய்ய - பொன்னிதான் பெண்ணாச்சே! அவள் ஆணாய்ப் பிறந்திருந்தாலும், "அடேய்! எனக்கும் பாகம் பிரித்துக் கொடு" என்று மல்லுக்கு நின்றிருக்கலாம். பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு அந்த உரிமை ஏது?

விருத்தாசலம் அவளுக்காக வைத்து விட்டுச் சென்ற சொத்துக்களோ மூன்று வகையானவை; ஒன்று, கூலி வேலை; இரண்டாவது, ஒரு கைக் குழந்தை; மூன்றாவது; ஒர் எருமை மாடு!

கூலி வேலை கிடைத்தால் உண்டு; குழந்தை குடிக்கப் பாலின்றி வளர்ந்தால் உண்டு; எருமை.....?

ஆமாம்; ஆண்டவனைவிட அந்த எருமைதான் இப்போது அவளுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாயிருந்தது. அந்த ஆறுதலும் நெடுநாள் நீடிக்கவில்லை. ஆறு மாதங்களுக்கெல்லாம் அந்த எருமை கருவுற்று விட்டது.

அப்புறம் என்ன? இருக்கும்போது பொன்னியின் வீட்டு அடுப்பு எரிந்தது; இல்லாதபோது அணைந்து கிடந்தது.

அருகில் இருந்தவர்களில் ஒருத்தி ஒரு நாள் பொன்னியை நோக்கி, "ஏன் பொன்னி இப்படியே இருந்தா எப்படி. அந்த எருமையை யாருக்காச்சும் வித்துப்பிட்டுப் பணத்தை எடுத்துக்கிட்டுப் பேசாம உங்க அண்ணாச்சி வீட்டுக்காச்சும் போய்ச் சேருவதுதானே?” என்று கேட்டாள்.

"நல்லாச் சொன்னே ‘உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா!'ன்னு ஆவதற்கா? அந்தப் பணம் இருக்கிறவரைக்கும் அவன், 'இங்கே வா, தங்கச்சி! அங்கே வா, தங்கச்சி'ன்னு சொல்லிக்கிட்டு இருப்பான். அப்புறம் அவன் யாரோ, நான் யாரோ தானே?”

வி.க. -13