பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

விந்தன் கதைகள்

சிவப்பு ஓலைச் சுருள்கள் கெம்புக் கற்கள் பதித்த கம்மல்களாக மாறின. மூக்கில் செருகியிருந்த விளக்குமாற்றுக் குச்சி ஜொலிக்கும் ஒற்றைக் கல் பதித்த மூக்குத் திருகாணியாயிற்று. கைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த பித்தளைக் காப்புகள் தகதகவென்று மின்னும் தங்கக் காப்புகளாக ஜன்ம மெடுத்தன.

இப்பொழுதெல்லாம் அவள் தன்னுடைய குழந்தை கத்தும்போது, "அதற்கென்ன கேடு கொஞ்சம் சர்க்கரைத் தண்ணீரை ஊற்றி வைத்தால் போச்சு!" என்று எண்ணுவதில்லை; ‘அவனுக்கு இல்லாத பாலா அவன் குடித்து மீந்த பாலை விற்றால் போச்சு!’ என்று நினைத்தாள்.

* * *

ந்த இரண்டு வருட காலமும் ஒரு நாளாவது பொன்னியின் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்காத அவளுடைய அண்ணன், திடீரென்று ஒரு நாள் அவளைத் தேடி வந்தான். அப்படி வரும்போது அவன் சும்மா வரவில்லை; ஒரு அழகான காரணத்தையும் சொல்லிக் கொண்டு வந்தான்.

"பொன்னி இந்த மனசு இருக்குதே, இது ரொம்ப ரொம்பப் பொல்லாதது எத்தளை நாளாஉன்னைப் பார்க்கனும், பார்க்கணும்னு அது அடிச்சிக்கிட்டு இருந்தது, தெரியுமா? எங்கே, வேலை ஒஞ்சாத்தானே! அதில்லாம எத்தனையோ தொல்லை, தொந்தரவுங்க! வீட்டுக் கூரை பொத்தலாப் போச்சு வரப்போறது மழைக் காலம். அதைப் பிரிச்சுக் கட்டறதுண்ணா இப்போ ஐம்பது ரூபாயாச்சும் வேணும், உழவுமாடு ரெண்டும் திடீர்னு 'சீக்கு' வந்து செத்துப் போச்சு, திரும்ப வாங்கிறதுன்னாஇருநூறு ரூபாயாச்சும் ஆவும். ஆடித் தூறல் தூறுது, நாலு கலம் விதை நெல்லு வாங்கி விதைக்கலாம்னா கையிலே காசில்லே! -உம், அப்படியெல்லாம் இருக்குது, என் கஷ்டம் இங்கே வந்து உன்னுடைய கஷ்டத்தையும் பார்த்து ஏன் இன்னும் கஷ்டப்படணும்னுதான் நான் இத்தனை நாளா இங்கே வரலே, தங்கச்சி" என்று ஒரே ‘கஷ்ட'மாகச் சொல்லிக் கொண்டே போனான் அவன்.

"ஊம்" என்று விஷமத்தனத்துடன் புன்னகை புரிந்தாள் பொன்னி.

அடுத்தாற்போல் அந்த "நாலு பேர்" இருக்கிறார்களே, நன்மைக்கும் தீமைக்கும் - அவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டுவிட்டான் அண்ணன்!