பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன் கதைகள்-1

முல்லைக் கொடியாள்

‘சோ' வென்று பெய்துகொண்டிருந்த சித்திரை மாதத்துச் செல்வ மழை அப்பொழுது தான் விட்டது. மேகத்தின் பின்னால் அதுவரை மறைந்திருந்த ஆதவன் வானவில்லின் வர்ண விசித்திரத்தைக் கண்டு அதிசயித்த தென்றல் காற்று, ஜம்மென்று மலர்ந்த மலர்களின் ‘கம் மென்ற மணத்துடன் கலந்து வந்தது. மழைக்குப் பதுங்கியிருந்த பட்சி ஜாலங்கள் படபட"வென்று தங்கள் சிறகுகளை அடித்துக் கொண்டு வான வீதியை நோக்கி மேலே கிளம்பியபோது, அவற்றிலிருந்து வைரத்தைப் பழிக்கும் நீர்த்துளிகள் ‘சொடசொடவென்று கீழே உதிர்ந்தன. கார் அரசன் தந்த இந்தக் காட்சியைக் கண்டு பொறாமை கொண்ட காற்றரசன், பொங்கியெழுந்து பூங்கொடிகளைக் குலுக்கிக் கொட்டி, பூமா தேவியையே ‘பூ’ தேவி யாக்கிவிட்டான். அந்த அழகில் ஈடுபட்ட ஆனந்தத்தாலோ என்னமோ, தாவர இனங்கள் தலைவிரித்தாடின. அந்த ஆனந்த நடனத்திலிருந்து கிளம்பிய அற்புத கீதம். என்னை அறையை விட்டு வெளியே வரச் செய்தது.

திண்ணைக்கு வந்தேன். அந்தக் கிராமத்திற்கே ஒரு தனி அழகைக் கொடுத்துக் கொண்டிருந்த வெளுத்த வானம் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. நான் இருந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் தான் அவள் இருந்தாள். அந்த வீட்டுக்கு முன் பக்கத்தில் கட்டியிருந்த வேலி மீது முல்லைக் கொடி படர்ந்திருந்தது. சந்திரன் தலை காட்டியிருந்த சமயம்; அவள் வெளியே வந்தாள். வேறெதற்கு? பூப் பறிக்கத்தான்.

என்னைப் போல் முல்லைக் கொடிக்கும் அவளுடன் ஒடியாடி விளையாட வேண்டுமென்று வெகு நாட்களாக ஆசை போலிருக்கிறது. அதற்கேற்றாற் போல் அவளுக்கு எட்டாத உயரத்திலிருந்து ஒரு கொடியில் முல்லை மலர்கள்அரும்பியிருந்தன. மந்த மாருதத்தில் மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்த அந்த முல்லைக் கொடி தன்னை நெருங்கி வரும்போது, அவள் துள்ளிக் குதித்து அதை எட்டிப் பிடிக்க முயன்றாள். அவளைச் சிரிக்க வைத்து அழகு பார்ப்பதை விட அழ வைத்து அழகு பார்ப்பதில் அந்தக்

வி.க. -2