பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடக்காத கதை

201


கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் விழுந்து எழுந்த கண்ணுச்சாமியின் மனம் என்னவெல்லாமோ எண்ணி எண்ணி ஏங்கிற்று. அவனுடன் விளக்கைத் தூக்கிக் கொண்டு வந்த யாரும் அவனைக் கவனிக்கவில்லை- முனிசாமி கூடத்தான்!-எப்படிக் கவனிக்க முடியும்? சுவாமி தூக்குபவர்களோ, கஷ்டம் தெரியாமல் இருப்பதற்காக ‘ஓ'வென்று ஆரவாரம் செய்து கொண்டு மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாலல்லவா 'காஸ் லைட்' சுமப்பவர்கள் ஓட்டமும் நடையுமாகச் செல்ல வேண்டியிருக்கிறது?

ஆகவே சிறிது நேரத்திற்கெல்லாம் கண்ணுச்சாமி தன்னந்தனியனாகி விட்டான். அந்த நள்ளிரவில் தள்ளாடிய வண்ணம் எழுந்து, அவன் தன் வீட்டை நோக்கி நடந்தான். வாயிலில் கட்டி வைத்திருந்த மூங்கில் தட்டியை அவிழ்த்து அப்பால் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான். அரவம் கேட்டு அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்த காத்தாயி, “யார் அது?" என்று அவனை அதட்டிக் கேட்டாள்.

"நான்தான், காத்தாயி!" என்று கண்களில் நீர் மல்கச் சொன்னான் கண்ணுச்சாமி.

"என்ன, இந்த நேரத்திலேயே வந்துட்டே? பொழுது விடிந்தில்லே வருவேன்னு பார்த்தேன்?”

‘'நானும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டுப் போனேன். காத்தாயி அந்தப் பாழும் தெய்வம்....."

“என்ன, என்ன!-ஏன்? என்ன நடந்தது?” என்று படபடப்புடன் கேட்டுக் கொண்டே, கட்டிச் சுருட்டிக் கொண்டு எழுந்து தன் கணவனுடைய தோள்களைப் பற்றினாள் காத்தாயி.

கண்ணுச்சாமி நடந்ததைச் சொன்னான்.

"இதற்கா இப்படி அழறே? அந்தத் தர்ம ராஜாதலையிலே இடி விழா என்று நினைச்சுக்கிட்டுப் பேசாம இருக்காம!” என்று சொல்லிக் காத்தாயி அவனைத் தேற்றினாள்.

***

பொழுது விடிந்தது. "தன்னுடைய கஷ்டம் விடியுமா?" என்று எண்ணிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான் கண்ணுச்சாமி, காலைக் கடன்களையெல்லாம் முடித்துக் கொண்டு, கவலையுடன் அல்லாப் பிச்சை ராவுத்தரின் கடையை நெருங்கினான்.