பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

விந்தன் கதைகள்

குடித்தனம் செய்வதைவிட, வேறு தொழில் உனக்கு என்னத்திற்கு?” என்று கேட்டு என் வாயை அடக்கி விடுவார்.

யோசித்துப் பார்த்தால், இப்போது நான் கொஞ்சநஞ்சம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேனே, அதுகூட எனக்காக இல்லையென்று தோன்றுகிறது.

வேடிக்கையைத்தான் கேளுங்களேன்:

என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக என் அப்பா பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த போது, “இந்தக் காலத்தில படித்த பெண்களின் நடவடிக்கைகளைப் பார்த்தால், நம்ம ராஜினியை ஏன் படிக்க வைக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது" என்றாள் அம்மா.

"சில சமயம் எனக்கும் அப்படித்தான் படுகிறது. ஆனால் இந்தக் காலத்துப் பையன்கள்தான், ‘பெண்ணுக்குப் படிக்கத் தெரியுமா, பாடத் தெரியுமா, ஆடத் தெரியுமா?’ என்றெல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார்களே! அதற்காகத்தான் இவளைப் படிக்க வைக்க வேண்டுமென்று பார்க்கிறேன்" என்றார் அப்பா.

எப்படியிருக்கிறது, கதை? எப்பொழுதோ எவனோ வரப்போகிறானே, அவனுக்காக என்னைப் படிக்க வைக்கப் போகிறார்களாம், எனக்காக, என் வயிற்றை நானே வளர்த்துக் கொள்வதற்காக அவசியமானால் என் உயிரை நானே காப்பாற்றிக் கொள்வதற்காக, வேறொருவர்துணையின்றி நானும் இந்த உலகத்தில் சுயமரியாதையோடு உயிர் வாழ்வதற்காக-அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்களாம்; என்னையும் ஏதாவது செய்து கொள்ள விடமாட்டார்களாமே!

பார்க்கப் போனால், நாளாக ஆக என்னைப்பற்றி அவர்களுக்கு ஒரே ஒரு கவலைதான் மிஞ்சியிருந்தது. அந்தக் கவலை உலக வழக்கத்தை யொட்டித் தாங்கள் கண்ணை மூடுவதற்குள் எனக்குக் கல்யாணத்தைப் பண்ணி வைத்து விட வேண்டு மென்பதுதான்!

அதற்கேற்றாற் போல் அத்தகைய கவலையை அவர்களுக்கு அளிக்கக்கூடிய வயதை நானும் அப்போது அடைந்திருந்தேன். என் உடம்பிலே புதிய தெம்பு, உள்ளத்திலே புதிய உணர்ச்சி, அங்க அவயவங்களிலே புதிய கவர்ச்சி எல்லாம் என்னை வந்து எப்படியோ அடைந்துவிட்டன. இந்த மாறுதல் என் தாய் தந்தையர் அதுவரை என்னிடம் காட்டி வந்த அன்பிலும் ஆதரவிலும் கூடத் தலையிட்டது.