பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்ன பாவம் செய்தேன்?

207

நான் அவரைச் சுற்றி சுற்றி வந்தேன். இந்த நிலையிலே நான் எதற்காகப் பெண்ணாய்ப் பிறந்தேனோ, அதற்காக மூன்று குழந்தைகளையும் பெற்று வைத்தேன்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்த அன்பு அத்தனையும் சேர்ந்து அந்தக் குழந்தைகளாக உருவெடுத்து வந்து விட்டனவோ என்னவோ, அதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கையில் துளிக்கூட அன்பேயில்லாமற் போய்விட்டது. நாளடைவில் அவர் என்னை எலியைப்போல் பாவிப்பதும், அவரை நான் பூனையைப்போல் பாவிப்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

இதனால் அந்த வீட்டில் குடித்தனம் செய்வதை 'என் தலைவிதி' என்று நான் நினைத்துக் கொண்டேன்; அந்தக் குடித்தனம் நடப்பதற்கு வேண்டிய வரும்படிக்கு வழி தேடுவதை அவர் 'தன்தலைவிதி’ என்று நினைத்துக் கொண்டார்.

இந்த லட்சணத்தில் ‘ஏன் பிறந்தோம்?' என்ற நிலையில் எங்கள் குழந்தைகள் வளர்ந்து வந்தன.

போதிய பணம் மட்டும் இருந்திருந்தால், துன்பத்தை எதிர்த்து நின்று நாங்கள் ஒரளவு இன்பத்தை அடைந்திருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அதுதானே எங்களிடம் இல்லை?

***

என் வாழ்க்கையின் இரண்டாம் அத்தியாயம் ஆரம்பமாகி எப்படியோ பத்து வருஷங்கள் கழிந்துவிட்டன. இனி மூன்றாம் அத்தியாயம் ஒன்றுதான் பாக்கியிருந்தது. அதாவது, முதலில் என் தந்தைக்குப் பாரமாயிருந்து, பின்னால் என் கணவருக்குப் பாரமாயிருந்த நான், இப்போது என்மகனுக்குப் பாரமாக வேண்டும்.

இந்த மூன்றாவது அத்தியாயத்தோடு மற்ற பெண்களுடைய வாழ்க்கையைப் போல் என்னுடைய வாழ்க்கையும் முடிந்துவிடும். ஆனால் அதற்குரிய வயதை என் மகன் அடைய வேண்டியிருந்தது. அது வரை ஒன்று என் கணவர் உயிருடன் இருந்தாக வேண்டும்; இல்லையென்றால் நான் அவருக்கு முன்னால் இறந்துபோக வேண்டும்-இதுதானே நம் பாரத நாட்டுப் பெண்மணிகளுக்குப் பெரியோர் வகுத்துள்ள வழி?

வழி, நல்ல வழியாயிருக்கலாம். ஆனால் யமனுடைய ஒத்துழைப்பும் அல்லவா அதற்கு அவசியம் வேண்டியிருக்கிறது?