பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலைக்காரி விசாலம்

215

மடியில் தலையைப் புதைத்துக் கொண்டு அவள் விம்மி விம்மி அழுதாள்.

“விசாலம்! நீயா விசாலம் இதென்ன கோலம்? இந்தக் கோலத்தில் உன்னைப் பார்க்கவா நான் இத்தனை நாளும் உயிரை வைத்துக் கொண்டிருந்தேன்? குழந்தை எங்கே?. குழந்தை எங்கே?” என்று கண்ணிர் மல்கத் துடிதுடித்துக் கொண்டே அவளைத் தூக்கி நிறுத்தினார் அவர்.

"நான் சொன்னபடி முதலிலேயே அந்தப் பாழாய்ப் போன பர்மாவை விட்டு வெளியேறியிருந்தால் நமக்கு இந்தக் கதி நேர்ந்திருக்குமா? 'இன்னும் என்ன ஆகிறதென்று பார்ப்போம்’ என்று பணத்தை நம்பி நாளைத் தள்ளிக்கொண்டு வந்தீரே, கடைசியில் அந்தப் பணம் போன வழி நமக்குத் தெரிந்ததா? நாம் போன வழி பணத்துக்குத் தெரிந்ததா?" என்று விம்மலுக்கும் விக்கலுக்கும் இடையே கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டாள் விசாலம்.

ராமேஸ்வரனுக்கு ஒன்றுமே புரியவில்லை; அவருக்கு எல்லாம் ஒரே வியப்பாயிருந்தது. வாயைப் பிளந்தபடி, “நம்முடைய எஜமானியம்மாளா நமக்கு இத்தனை நாளும் வேலைக்காரியாக இருந்தாள்" என்று எண்ணமிட்டார்.

மனோன்மணியும் இன்னதென்று சொல்ல முடியாத நிலையில் தவியாய்த் தவித்தாள்.

* * *

டுத்த நிமிஷம் ஸ்ரீமான் ராமேஸ்வரனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, அவர் தம்மை அறியாமலேயே, "சேகர்! சேகர்!" என்று இரைந்து கொண்டே வாயிற்படிக்கு வந்தார்.

எங்கேயோ விளையாடிக் கொண்டிருந்த சேகர் ஓடோடியும் வந்தான். ராமேஸ்வரன் அவனை வாரியெடுத்து அன்புடன் அணைத்துக் கொண்டுபோய்த் தள்ளு வண்டியில் உட்கார வைத்தார்; தாமே வண்டியைத் தள்ளிய வண்ணம் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்.

சேகருக்கு ஒன்றும் புரியவில்லை; திருதிருவென்று விழித்தான்-என்றும் இல்லாத திருநாளாய், கேவலம் ஒரு வேலைக்காரியின் பிள்ளை ஆனானப்பட்ட எஜமானே வண்டியில் வைத்துத் தள்ளுவதென்றால்.....?