பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளி பேசுகிறது!

217

பத்திரமோ சித்திரமோ எழுதிக் கொள்வதில்லை, ரிஜிஸ்தரோ கிஜிஸ்தரோபண்ணிக் கொள்வதில்லை; எல்லைச்சண்டை போட்டுக் கொண்டு தொல்லைப்படுவது மில்லை; கோர்ட்டுக்குப் போய்க் கூப்பாடு போடுவதுமில்லை.

இன்னும் இறந்த காலத்தைக் குறித்து நாங்கள் வருந்துவதில்லை; எதிர்காலத்தைக் குறித்து ஏங்குவதுமில்லை; நிகழ்காலத் தோடு எங்கள் நினைவு நின்றுவிடும். ஆடுவதும் பாடுவதும் ஆனந்தக் கூத்தாடுவதுமாகவே எங்கள் பொழுதெல்லாம் கழியும்.

ஆஹா! என்ன அற்புதமான வாழ்வு! எவ்வளவு ஆனந்தமான வாழ்வு!

* * *

த்தகைய ஆனந்த வாழ்வுக்கு ஒரு சமயம் பங்கம் நேர்ந்துவிட்டது. என்னுடைய அம்மா தேடிக் கொண்டு வந்து கொடுத்த இரையைத் தின்று நான் வளர்ந்து கொண்டிருந்த காலம். அப்போது தான் எனக்கு இறகுகள் முளைத்துக் கொண்டிருந்தன. புதிய இறகு முளைப்பதோடு என் உள்ளத்தில் புதிய உற்சாகமும் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. பொந்தில் இருந்தபடி வானத்தை எட்டி எட்டிப் பார்ப்பேன். அந்த நீல வானிலே எத்தனை எத்தனையோ பறவைகள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பறந்து சென்று அவைகளுடன் கலந்து கொள்ளவேண்டும் போல் தோன்றும். அந்தப் பறவைகள் என்னை ‘வா, வா' என்று அழைத்தனவோ என்னவோ-எனக்குத் தெரியாது! எனக்கு மட்டும் அவை ‘வா, வா’ என்று என்னை அழைப்பது போலிருக்கும்.

ஒரு நாள் என்னுடைய ஆவலை அம்மாவிடம் தெரிவித்தேன். "அவசரப்படவேண்டாம்; காலம் வரும்போது உன்னுடைய ஆசை நிறைவேறும்" என்று அவள் சொல்லி விட்டாள்.

"காலம் எப்போது வருவது, ஆசை எப்போது நிறைவேறுவது?” என்று எனக்கு ஆத்திரமாயிருந்தது.

அதற்கேற்றாற்போல் அன்று ஒரு சிட்டுக் குருவி, நான் இருந்த மாமரத்துக்கும் பூமிக்குமாக 'ஜிவ், ஜிவ்' என்று பறந்து, 'கீச், கீச்' என்று விளையாடி என்னுடைய ஆத்திரத்தை மேலும் மேலும் கிளப்பி விட்டுக் கொண்டே இருந்தது.