பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளி பேசுகிறது!

221

அந்தப் போக்கிரிப் பெண் அத்துடன் நிற்கவில்லை. “எனக்கென்ன, ஏமாந்தால் என்றைக்காவது ஒரு நாள் அது ஓடிவிடப் போகிறது" என்று அவள் தன் அக்காவை எச்சரித்தாள்.

"ஏண்டி, இவ்வளவு நாள் நம்மிடம் வளர்ந்த பிறகு அது எங்கேயாவது நன்றி கெட்டதனமாக ஓடி விடுமா?" என்றாள் அக்கா.

ஐயோ, பாவம் என்னையும் அவள் அந்தக் கேடுகெட்ட நாயுடன் சேர்த்துக் கொண்டாள் போலும் இவளை நானா என்னிடம் நன்றி காட்டச் சொல்லி அழைத்தேன்?

ரொம்ப அழகு தான்!

"கூண்டின் கதவைத் திறந்துதான் பாரேன்; அது நன்றி கெட்டதனமாக நடந்துகொள்கிறதா, இல்லையா என்று!" என்றாள் தங்கை.

அக்காவுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. "திறந்தால் என்னடி ஒடிப்போய்விடுமா?" என்று தங்கையிடம் வீம்பு பேசிக் கொண்டே, நான் அத்தனை நாளும் அடைபட்டிருந்த சிறையின் கதவை அவள் அன்று திறந்தே விட்டாள்!

அவ்வளவுதான்; அதற்குப் பிறகு ஒரு நிமிஷமாவது அங்கே தாமதிக்க எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? "விடுதலை, விடுதலை, விடுதலை" என்று கூவிக்கொண்டே எடுத்தேன் ஒட்டம்!

ஆஹா! எத்தனையோ நாட்களுக்குப் பிறகு- எவ்வளவோ கஷ்டங்களுக்குப் பிறகு-நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகக்கிடைத்த விடுதலையில்தான் என்ன இன்பம்! என்ன இன்பம்!