பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விரோதி

223

கள்ளுக்கடை இருந்த நாட்களில் அங்கே கூடும் மனிதர்களைப் புஷ்பராஜ் எத்தனையோ முறை பார்த்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவர்கள் மனிதராகவே அவனுக்குத் தோன்றமாட்டார்கள். அதே இடத்தில் தேநீர்க் கடை இருக்கும் இந்த நாளிலோ, அங்கே கூடியிருந்தவர்களெல்லாம் அவனுக்கு மனிதர்களாகவே தோன்றினார்கள். இந்த அதிசயத்துக்கு மத்தியில் இன்னொரு அதிசயத்தையும் புஷ்பராஜ் காண நேர்ந்தது. அதாவது தேநீரையும் அந்த ‘மாஜிகுடியர்கள்' கள்ளைப்போல் பாவித்துக் கண்ணை மூடிய வண்ணம் குடித்துக் கொண்டிருந்தனர். அந்தக்காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையா யிருந்ததோடு மட்டுமல்ல, பரிதாபமாகவும் இருந்தது!

அவர்களில் ஒருவன் இன்னொருவனை நோக்கி, "என்ன, இசக்கிமுத்து அண்ணே நம்ம பேச்சிமுத்துவைக் காணவே காணோமே" என்று விசாரித்தான். "அவனுக்கென்னப்பா, மவராசன்!" என்றான் இசக்கிமுத்து.

"நல்லாச் சொன்னே, போ! மவராசனாவது, மண்ணாங்கட்டியாவது காலையிலேருந்து சாயந்திரம் வரை ரெண்டு ரூவாக் காசுக்கு அவன் குப்புக் கொல்லன் பட்டறையிலே என்னோடு சேர்ந்து இல்லே சம்மட்டி அடிச்சிட்டு இருந்தான்?"

இந்தத் தகவலைக் கேட்டதும் "நிசமாவா, நல்ல முத்து?" என்று வியப்புடன் கேட்டான் இசக்கிமுத்து.

"ஆமாங்கிறேன்!” என்றான் நல்லமுத்து.

"அப்படின்னா நான் நெனைச்சது சரிதான்; அவன் துத்தா போட்டுக்கிட்டு வரத்தான் போயிருப்பான்?" என்றான் இசக்கிமுத்து.

இந்த 'துத்தா' என்ற வார்த்தையைக் கேட்டதும் புஷ்பராஜ் திடுக்கிட்டான். அந்தப் பக்கத்துக் குடியர்கள் 'துத்தா' என்று சொன்னால் ‘கள்’ என்று அர்த்தம். மதுவிலக்கைப் பற்றி என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டு வந்த புஷ்பராஜுக்கு இந்த வார்த்தையைக் கேட்டதும் எப்படி இருக்கும்? - அவன் முகத்தில் அசடு வழிய இசக்கிமுத்தையும் நல்லமுத்தையும் இமை கொட்டாமல் பார்த்த வண்ணம் மேலே என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தான்.

"என்ன சொன்னே, துத்தாவா? அது எங்கேப்பா இப்போ கெடைக்குது?" என்று கேட்டான் நல்லமுத்து.