பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விரோதி

227

திருதிருவென்று விழித்துக் கொண்டே இருந்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தனர். என்ன கண்ணாறாக் காட்சி இது கண்ணுக்கெட்டிய தூரத்தில் பேச்சிமுத்து பேச்சு மூச்சற்றுக் கீழே விழுந்து கிடந்தான்.

இசக்கிமுத்து அவனை நெருங்கி இப்படியும் அப்படியுமாய் இரண்டு உருட்டு உருட்டிப் பார்த்தான்; ஆசாமி அசைந்து கொடுப்பதாயில்லை. நல்லமுத்து ஒரு பெரும் பிராயத்தனம் செய்து அவனைத் தூக்கி உட்கார வைத்தான். அவ்வளவுதான்; ‘கப கப'வென்று பேச்சிமுத்து வாயிலெடுத்துவிட்டான்

இதனால் அவனுடைய மயக்கம் கொஞ்சம் தெளிந்தது. கண்களை அகல விரித்து அவன் தனக்கு எதிரேயிருந்தவர்களைப் பார்த்தான்; இருவர் நால்வராகத் தோன்றினர்.

அடுத்த நிமிஷம், ‘ஐயையோ ஆப்பிட்டுக்கிட்டேன்! ஐயையோ ஆப்பிட்டுக்கிட்டேன்’ என்று அலறிக்கொண்டே அவன் எழுந்து ஓட முயன்றான்.

முடியவில்லை!

“என்னதம்பி இந்த லோகத்திலேதான் நீ இருக்கிறாயா? இல்லை வேறே எந்த லோகத்திலாச்சும் இருக்கிறாயா?” என்று அவனுடைய தலையைப் பிடித்து ஆட்டிய வண்ணம் கேட்டான் நல்லமுத்து.

அவனுடைய கேள்விக்குப் பேச்சிமுத்து ஒன்றும் பதில் சொல்லவில்லை. அதற்கு பதிலாக அவன், "கபர்தார் கபர்தார்" என்று சம்பந்தமில்லாமல் கத்தினான்.

‘கபர்தார்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் இசக்கிமுத்தும் நல்லமுத்தும் ஒருவரை யொருவர் ஜாடையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

"என்ன அண்ணே, விசயம் புரிஞ்சுதா?" என்று கேட்டான் இசக்கிமுத்து.

"ரொம்ப நல்லாப் புரிஞ்சுது!" என்று தலையைப் பலமாக ஆட்டினான் நல்லமுத்து.

அதற்குள் ஒரளவு சுய உணர்ச்சி பெற்று பேச்சிமுத்து தட்டுத் தடுமாறி எழுந்து நின்று இசக்கிமுத்துவையும் நல்லமுத்துவையும் மாறி மாறிப் பார்த்தான்.

"என்ன, தம்பி நல்லாயிருக்குதா, நியாயம்?" என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கிய வண்ணம் கேட்டான் நல்லமுத்து.