பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

விந்தன் கதைகள்

குழந்தைகளை அப்படி யெல்லாம் ஆடச் செய்துகொண்டிருந்தது. 'மாஜி குடியர்'களில் பலர் தேநீர் கடையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்; அவர்களுடைய விழி ராஜவிழியாயிருந்தது. ‘திருட்டுச் சாராயம்' குடித்துவிட்டு வருவதற்காகச் சிலர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றனர்; அவர்களுடைய விழி திருட்டு விழியாயிருந்தது. தலையை வாரி முடிந்து கொள்ளக்கூட நேரமில்லாத - நேரமிருந்தாலும் விருப்பமில்லாத கிராமத்துப் பெண்களில் பலர் நீர்க் குடத்துடன் கிணற்றடியில் நின்று, தங்களுடைய தரித்திரத்தை ஓரளவு மிகையாகவே உருவகப்படுத்தி உலகத்துக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். திண்ணைக் கச்சேரிகளிலும் மரத்தடிக் கச்சேரிகளிலும் கலந்துகொண்ட பரசிரம ஜீவிகளின் கூச்சலோ பெருங் கூச்சலாயிருந்தது. அவர்களுடைய கூச்சல் பொழுது விடிந்ததும் குளக்கரையில் மல்லாந்து படுத்துவிடும் மழைக் காலத்து மண்டுகங்களின் ஓசை நயத்தோடு கூடிய இரைச்சலை ஒத்திருந்தது. மூன்று மாதத்துக்கொருமுறை, ஆறு மாதத்துக்கொருமுறை காசைக் கண்ணால் பார்க்கும் கிராமத்துச் சுய சிரம ஜீவிகளோ களைப்பின் மிகுதியால் கஞ்சித் தண்ணீருக்காக அடுப்பண்டை காத்துக் கொண்டிருந்தனர். உலர்ந்த வெற்றிலை சருகைப் போட்டுக் குதப்புவதிலேயே இந்த உலகத்தையும் - ஏன் சோற்றையும்கூட மறந்துவிடும் கிராமத்து கிழவர்களும் கிழவிகளும் தங்களுடைய பேரப்பிள்ளைகளை அழைத்துக் கொஞ்சம் வெற்றிலை பாக்கு நறுக்கித் தருமாறு வேண்டிக் கொண்டிருந்தனர். மாடும் மனிதனும் ஒன்றாக ஓய்வு பெறும் அந்த வேளையிலே, புஷ்பராஜ் தன்னுடைய ஆற்றங்கரை பங்களாவின் அழகிய வராந்தாவில் இப்படியும் அப்படியுமாக 'ராஜ நடை’ போட்டுக் கொண்டிருந்தான்.

கிராமத்தின் ஒரு கோடியில் தனியாக இருந்த அந்தப் பங்களாவின் முன்னால் அவனுடைய கவனத்தைக் கவருவதற்கு எத்தனையோ காட்சிகள் இருந்தன. எனினும் முதல் நாள் எழுந்த கேள்வி அவனுடைய உள்ளத்தில் ஏனோ இன்னும் இடம் பெற்றிருந்தது.

‘சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடிகெடுக்கும் மனுசன் யாராயிருக்கும்?’

புஷ்பராஜின் சிந்தனை மேலும் மேலும் விரிந்து கொண்டே சென்றது. அவ்வாறு விரிந்த சிந்தனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தானோ என்னமோ மாஜி குடியன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான்.