பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விரோதி

 231

அவனைக் கண்டதும், "யார் அப்பா நீ?" என்று கேட்டான் புஷ்பராஜ்.

"பேச்சிமுத்துங்க!" என்றான் வந்தவன்.

‘பேச்சிமுத்து’ என்றதும் முதல் நாள் தேநீர்க் கடையில் நடந்த சம்பாஷணை புஷ்பராஜின் நினைவுக்கு வந்தது. அவன் ஒரு கணம் திடுக்கிட்டான். மறுகணம் இன்னொரு சந்தேகம் எழவே, “அது சரி; உனக்கு இசக்கிமுத்தைத் தெரியுமா?" என்று கேட்டான்.

"தெரியுங்க"

"நல்லமுத்து....?" தூக்கிவாரிப் போட்டது பேச்சிமுத்துக்கு - "தெரியுங்க....!" என்று சொல்ல ஆரம்பித்தவன், "தெரியாதுங்க!" என்று குழறினான். அந்தப் பயல்கள் ஒருவேளை கபர்தார் ஐயாவைப் பற்றி இந்தப் பிள்ளையாண்டானிடம் சொல்லி விட்டார்களோ, என்னமோ என்ற சந்தேகம் வந்து விட்டது அவனுக்கு.

அந்த அப்பாவியின் நிலையை ஒருவாறு உணர்ந்த புஷ்பராஜ் பேச்சை மாற்ற எண்ணி "சரி இப்போ நீ எதற்காக இங்கே வந்திருக்கிறே?" என்று கேட்டான்.

அதற்குள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டான் பேச்சிமுத்து. "என்னசாமி, ஒண்ணுந் தெரியாத மாதிரிக் கேட்கிறீங்களே! இந்த நேரத்திலே, இப்படிப் பதுங்கிப் பதுங்கிப் பார்த்து முழிச்சுக்கிட்டு வேறே எங்கே வருவேனுங்க?" என்றான்.

"எனக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாது! நான் இந்த ஊருக்குப் புதுசு, நீயே விஷயத்தைச் சொல்லு" என்றான் புஷ்பராஜ். பேச்சிமுத்துவுக்கு மீண்டும் சந்தேகம் வந்துவிட்டது. "அப்படின்னா நீங்க யாருங்க?" என்று கேட்டான்.

இந்தச் சமயத்தில் உள்ளே யிருந்துவந்த ஒரு நெடிதுயர்ந்த மனிதர் "என்னடா, பேச்சிமுத்து அவனை உனக்குத் தெரியலையா?...அவன் என் மவன் புஸ்பராசன் பட்டணத்திலே படிச்சுக்கிட்டு இருந்தான்; இப்போ லீவுலே ஊருக்கு வந்திருக்கிறான்" என்றார்.

"அப்படியா சாமி ? இவரு பட்டணத்திலே படிச்சுக்கிட்டு இருந்தவரா? அதான் இவருக்கு ஒண்ணுமே தெரியலே!" என்றான் பேச்சிமுத்து.