பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

விந்தன் கதைகள்

அந்த நிமிஷம் அப்பாவின் யோசனை அவனுக்கு ஒரு விதத்தில் நல்லாதாகவே தோன்றிற்று. ஆனால் அடுத்த நிமிஷம்...?

அவனுடைய மன்திலே ஒரு பெரிய போராட்டம் எழுந்தது. அந்தப் போராட்டத்தின் காரணமாக அவனுடைய யோசனை வேறு திக்கை நோக்கிச் சென்றது. அந்தத் திக்கிலே ஒரு வாயில்லாத பசுவின் கன்றுக்காகத் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் பலிகொடுத்து நீதி வழங்கிய சோழனை அவன் அகக்கண்ணால் கண்டான்.

அவ்வளவுதான்; அவன் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்தது!

அதன் பலன்....?

** *

அன்றிரவே வீட்டை விட்டுச் சென்ற புஷ்பராஜ் மறுநாளை காலை கபர்தார் கனகராஜ் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகப் போலீஸ் அதிகாரிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தான். புழக்கடையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறை கபர்தாரின் உத்தரவில்லாமலே திறக்கப்பட்டது. உள்ளேயிருந்த சாராய ஜாடிகளெல்லாம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.

கபர்தார் கனகராஜ் கைதியானார்!

அதுவரை தன் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பராஜ், அப்பாவை அந்தக் கோலத்தில் பார்க்கச் சகிக்காமல் கண்களைக் கைகளால் மறைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதான்.

என்ன விசித்திரமான மனித இதயம்!

** *

அடுத்த சில நாட்களில் கபர்தார்கனகராஜின் வாக்கு மூலத்தைக் கொண்டு மற்றும் பலரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களெல்லாம் கபர்தாருக்குத் துணையாக இருந்து, அவ்வப்பொழுது திருட்டுச் சாராயம் காய்ச்சி கிராமமெங்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள் என்ற விஷயம் பின்னால் தெரிந்தது.

காட்டுத் தீ போல் பரவிய இந்தச் சேதி தாழம்பேடு முழுவதையுமே ஒரு கலக்குக் கலக்கி விட்டது. அதன் காரணமாகப் புஷ்பராஜைச் சிலர் வைதார்கள்; சிலர் வாழ்த்தினார்கள்.