பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுற்றமும் நட்பும்


ஒரு மாதத்திற்குப் பிறகு, அன்றுதான் ஊரிலிருந்து திரும்பி வந்தேன். எனது நண்பன் அரங்கநாதன் இறந்து விட்டான் என்ற செய்தி என் காதில் விழுந்தது. காலனைக் காலால் உதைத்தானாமே, அந்த சிவனை வழிபடுவதில் சாட்சாத் மார்க்கண்டேயனைக் கூடத் துக்கியடித்துக் கொண்டிருந்த அவனுக்கா இந்த கதி?

‘குழந்தையைத் தன் மார்போடு அனைத்துக் கொண்டு பாலூட்டும் அதன் தாய், ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாற்றும்போது அது வீறிட்டு அழுகிறது. மீண்டும் தனக்குப் பாலூட்டுவதற்காகத்தான் அன்னை அவ்வாறு செய்கிறாள் என்பதை அறிவதில்லை. அந்தக் குழந்தையின் அழுகையைப் போன்றதுதான் மனிதன் மரணத்தைக் கண்டு மனம் பதைப்பதும்’ என்கிறார் கவியரசர் தாகூர். ஆனாலும் அவனையறிந்த இதயம் சும்மாயிருக்கிறதா? என்னவெல்லாமோ எண்ணி எண்ணி ஏங்குகிறது....

என்னுடைய நிலை இப்படியென்றால் அவனுடைய சுகதுக்கங்களில் என்னைவிடச் சிறப்பாகப் பங்கெடுத்துக் கொண்டிருந்த அவன் மனைவியும் மக்களும் எந்த நிலையில் இருப்பார்கள்? - அவர்களைப் போய்ப் பார்த்து விட்டு வரலாமென்று புறப்பட்டேன்.

வழியில் சதாசிவம் வந்து கொண்டிருந்தார். அரங்கநாதனின் அத்தியந்த நண்பர் அவர் என்னைக் கண்டதும் உங்களுக்குச் சமாச்சாரம் தெரியுமா என்று அவர் ஆரம்பித்தார்.

“தெரியும்; அரங்கநாதன்.

'ஆமாம், என்ன அநியாயம் பாருங்கள். இன்னும் அவர் மறைந்துவிட்ட மாதிரியே எனக்குத் தோன்றவில்லை. அடடா, என்ன தங்கமான குணம் கேட்கும் போதெல்லாம் நூறும் இறுநூறுமாகக் கொடுத்துக் கொண்டே யிருப்பார். இனிமேல் அவரைப்போல் எனக்கு யார் உதவப் போகிறார்கள்?' என்றார் அவர்.

‘ம் என்ன செய்யலாம்? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! என்று உலக வழக்கத்தை யொட்டி உதட்டைப் பிதுக்கிவிட்டு, நான் மேலே நடையைக் கட்டினேன்.