பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் தேதி

249

பழரசம் அருந்திக் கொண்டிருந்தோமே, அதை மறந்துவிட்டுப் பச்சைத் தண்ணீர் குடிப்பதா...?”

"எட்டாதவற்றுக்கெல்லாம் கொட்டாவி விட்டு என்ன பிரயோஜனம்...?"

"இல்லையே எட்டுபவைக்கே அல்லவாநாம் கொட்டாவி விட வேண்டியிருக்கிறது...!"

"அதைச் சொல்லவில்லை நான்! வாழ்க்கைச் செலவுகளை வரவுக்குத் தகுந்தபடி ஒரு ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறேன்; அதாவது, மேற்கொண்டு கடனே வாங்கக்கூடாது என்கிறேன்!”

"அதற்கு வாழ்க்கைப்பாதை பட்டணத்து ரஸ்தா மாதிரி தார் போட்டு 'ஜம்'மென்று இருக்கவேண்டும். அப்படியில்லையே! அது மேடும் பள்ளமும் நிறைந்த பட்டிக்காட்டு ரஸ்தா மாதிரியல்லவா இருக்கிறது? அதை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வருவது எப்படி?”

"போதுமென்ற மனம் இருந்து, உள்ளவரை திருப்தியும் அடைவதாயிருந்தால்....”

"இன்று சாயந்திரம் நீ காப்பி இல்லை என்றாய்; நான் திருப்தியடைந்துவிட்டேன். அதேமாதிரி நான் புடவை இல்லை என்கிறேன், நீயும் திருப்தியடைந்து விடுகிறாயா?”

“ரொம்ப அழகுதான்!” "பார்க்கப்போனால் நம்மைக் காட்டிலும் வாழ்க்கையில் குறைந்த அளவு தேவையுடன் திருப்தியடைபவர்கள் வேறு யாருமே இருக்கமாட்டார்கள், மரகதம்!”

“ஏன் இல்லை? எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முனியன், மூக்கன், தொப்பை, சப்பை என்று இல்லையா?”

"அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? பிறர் வாழ்வதற்காக நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறது, மரகதம் பிரெஞ்சு அறிஞன் ஒருவன் ஜனங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறான். அதாவது மேல் வகுப்பு, மத்திய வகுப்பு, கீழ்வகுப்பு என்று அவன் வகுத்திருக்கிறான். மேல் வகுப்பார் சுதந்திரத்தை விலைக்கு வாங்குகிறார்கள்; கீழ் வகுப்பார் சுதந்திரத்தை விலைக்கு விற்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். இந்த இரு வகுப்பார்களுக்கும் மத்தியில் இரண்டுங்கெட்டானாக இருந்துகொண்டு