பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

விந்தன் கதைகள்

அவதிப்படுபவர்கள் தான் நம்மைப் போன்றவர்கள். நம்முடைய சூழ்நிலை வேறு; அவர்களுடைய சூழ்நிலை வேறு. நம்முடைய சுற்றுப்புறம் வேறு; அவர்களுடைய ஆசாபாசங்கள் வேறு. இவையனைத்தையும் கூட்டிக் குழப்பி ஒன்று சேர்க்கத்தான் அரசியல் தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுடைய முயற்சி இன்றுவரை வெற்றியடைய வில்லை..."

"இது என்ன, பெரிய பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களே! - போதும், தூங்குங்கள்!" என்று சொல்லி விட்டு மரகதம் வெளியே வந்து தன் நாத்தனாருடன் படுத்துக் கொண்டாள்.

“தேவைக்குமேல் வரும்படி உள்ளவர்களுக்கல்லவா சிக்கன உபதேசம் செய்ய வேண்டும்? தேவைக்குக் குறைவான வரும்படி உள்ளவர்களுக்குச் சிக்கன உபதேசம் செய்து என்ன பிரயோஜனம்?” என்று தனக்குள் முனகிக் கொண்டே அப்படியும் இப்படியுமாகப் புரண்டு படுத்தான் கணேசன்.

* * *

மறுநாள் காலை, “மரகதம், குளிப்பதற்கு வெந்நீர் போட்டுவிட்டாயா?” என்று கேட்டுக் கொண்டே கணேசன் எழுந்து வந்தான்.

"கரி இல்லை; கட்டையும் இன்னும் இரண்டு நாட்களுக்குத்தான் காணும் போலிருக்கிறது. நீங்கள் செம்பை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு போங்கள்!" என்றாள் மரகதம்.

"சரி, அப்படியே செய்தால் போச்சு" என்று அழுத்தலாகச் சொல்லி விட்டுக் கணேசன் கிணற்றடியை நோக்கி நடந்தான்.

அதன் பயனாக அன்று மாலை அவன் ஜலதோஷத்துடன் வீடு திரும்ப வேண்டியதாயிற்று; அன்றிரவே அவனுக்கு ஜூரம் வேறு வந்துவிட்டது. பொழுது விடிந்ததும் மரகதம், "டாக்டரிடம் போய் வாருங்களேன்!" என்று சொன்னாள்.

"எடுக்கும்போதே டாக்டரிடம் போவானேன்? உன்னுடைய சிக்கன உபதேசத்தை உத்தேசித்து இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரிக்குத்தான் போய் வருவோமே என்று பார்க்கிறேன்!” என்றான் கணேசன்.

"உங்கள் இஷ்டம்!” என்று சொல்லிவிட்டு முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள் மரகதம்.