பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் தேதி

251

இரண்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் மருந்து சாப்பிட்டதால் தானோ என்னவோ, கணேசன் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாதவனானான். இப்பொழுது அவன் டாக்டர் வீட்டுக்குப் போவதாயிருந்தால் ஏதாவது ஒரு வாகனத்தில் போகவேண்டும். அதற்குக் காசு வேண்டாமா? என்ன செய்வது? மரகதம் நல்லவேளையாகக் கடுகு டப்பியில் எட்டணா சேர்த்து வைத்திருந்தாள். அதை வாங்கிக் கொண்டு கணேசன் டாக்டர் வீட்டுக்குப் போனான். டாக்டர் தெரிந்தவராகையால் மருந்துக்கு உடனே பணம் கேட்கவில்லை. முதல் தேதியன்று பில் அனுப்பி வைக்கலாம் என்று பேசாமல் இருந்துவிட்டார்.

மரகதம் தனக்குத் தெரிந்த சிநேகிதி ஒருத்தியிடம் இருபத்தைந்து ரூபாய் கடன் வாங்கி அந்த வாரம் முழுவதும் காலக்ஷேபம் செய்து வந்தாள். ஒரு காலத்தில் கணேசனின் உடம்பும் தேறிற்று.

★ ★ ★

ன்று முதல் தேதி; அதே வெள்ளிக்கிழமை தான்; ஆனால் காலை நேரம்.

அதற்கு முதல் நாளே சம்பளம் வந்துவிட்டது. தங்கையின் பிரசவத்துக்காக வாங்கிய நூறு ரூபாய்க் கடனுக்கு இருபது ரூபாய் கொடுத்து விட்டுப் பாக்கியை வீட்டுக்குக் கொண்டு வந்திருந்தான். அவன் முகத்தை அன்று ஏனோ பார்க்கச் சகிக்க முடியவில்லை. அவ்வளவு வேதனை அவனுடைய முகத்தில் குடி கொண்டிருந்தது.

“காவேரி!" என்று இரைந்தான் கணேசன்.

அவள் கைக்குழந்தையுடன் வந்து அவனுக்கு எதிரே நின்றாள். அவளிடம் முப்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து “இன்றே மன்னியுடன் சென்று இருபது ரூபாயில் உனக்கு ஒரு புடவையும், குழந்தைக்கு ஒரு சட்டையும் வாங்கிக் கொள். பாக்கிப் பத்து ரூபாய் இருக்கிறதல்லவா? அதைச் செலவுக்கு வைத்துக் கொள். நாளைக்கே நீ ஊருக்குக் கிளம்பி விடலாம், போ!" என்றான்.

அவள் போய்விட்டாள்.

வீட்டுக்காரர் வந்தார். அவரிடம் இரண்டு மாத வாடகைக்கு நாற்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

மரகதத்தினிடம் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து, அதை உடனே அவள் சிநேகிதியிடம் கொடுத்துவிட்டு வரச்சொன்னான்.