பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

விந்தன் கதைகள்

 மறக்காமல் மாடிக்கு ஒடோடியும் சென்று, சதாவதானத்திடம் ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு வந்த பிறகு, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

பால்காரனுக்குப் பன்னிரண்டு ரூபாய்; வண்ணாத்திக்கு ஏழு ரூபாய்; டாக்டருக்குப்பத்து ரூபாய்-தனித்தனியே எடுத்துவைத்தான்.

மொத்தம் 149 ரூபாய் ஆயிற்று!

பாக்கி ஒரே ஒரு ரூபாய் இருந்தது. கொஞ்சங்கூட யோசிக்காமல் அதை வீட்டுச்செலவுக்காகதன் மனைவியிடம் அப்படியே முழுசாகத் தூக்கிக் கொடுத்துவிட்டான்!

"ஒரு மாதச் செலவுக்கு இவ்வளவுதானா?” என்று அவள் திடுக்கிட்டுக் கேட்டாள்.

"வாழ்க்கைச் செலவை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரவேண்டுமென்றாயே, கொண்டுவா! மேற்கொண்டு கடன் வாங்குவது தான் உன்னுடைய புத்திமதிப்படி ஒழுங்கீனமாச்சே!” என்றான் கணேசன் வெறுப்புடன் சிரித்துக் கொண்டே.

அவன் சிரித்ததும் அதுவரை அப்பாவை நெருங்கப் பயந்து கொண்டிருந்த குழந்தைகள் இரண்டும் கொஞ்சம் தைரியமடைந்து அவனை நெருங்கின.

"அப்பா என்னை எப்போ சர்க்கஸ்-க்குக் கூட்டிக் கொண்டு போவே?" என்று கேட்டாள் பானு.

"முதல் தேதி!"

"சாக்லெட்....?"

"முதல் தேதிக்குத்தான்!”

"எனக்கு நோட் புத்தகம் எப்போ அப்பா வாங்கி வருவே?" என்று கேட்டான் முரளி.

"முதல் தேதி”

"ஸைக்கிள்.....?"

"முதல் தேதிக்குத்தான்!"

"இந்த முதல் தேதிக்கு ஒரு முடிவே கிடையாதோ?” என்றாள் மரகதம்.

“நம் வாழ்வு முடியும்வரை அதற்கு ஒரு முடிவே கிடையாது” என்று அழுந்தந் திருத்தமாகச் சொன்னான் கணேசன்.