பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எங்கள் ஏகாம்பரம்

யிற்றுப் பிழைப்புக்காகப் பம்பாயின்மீது நான் படையெடுத்து வந்து எத்தனையோ வருஷங்களாகி விட்டன. ஆயினும் எங்கள் டிவிஷனையும் எங்களுடைய டிவிஷன் கெளன்ஸிலரான ஏகாம்பரம் அவர்களையும் என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை.

சிலர் உலகத்தைச் சீர்திருத்த நினைக்கிறார்கள்; சிலர் தங்கள் தேசத்தைச் சீர்திருத்த நினைக்கிறார்கள்; சிலர் தாங்கள் பிறந்த ஜில்லாவைச் சீர்திருத்த நினைக்கிறார்கள்; சிலர் தாங்கள் வசிக்கும் வட்டாரத்தைச் சீர்திருத்த நினைக்கிறார்கள். இவர்களில் கடைசி இனத்தைச் சேர்ந்தவர் எங்கள் ஏகாம்பரம்.

நான் மட்டும் அல்ல; எங்கள் வட்டாரத்தைச் சேர்ந்த எல்லோருமே அவரை 'எங்கள் ஏகாம்பரம்' என்று செல்லமாகக் குறிப்பிடுவது வழக்கம்.

கடந்த இருபது வருஷ காலமாக இந்தப் பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது. அதாவது, அவர் எங்கள் வட்டாரத்துக்குக் கெளன்ஸிலராக வந்ததிலிருந்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அதற்கு முன்னால் அந்தப் பக்கத்தில் அவரை எல்லாரும் 'பொடிக்கடை ஏகாம்பரம்' என்று அழைப்பது வழக்கம்.

ஆமாம், பூர்வாஸ்ரமத்தில் அவருடைய தொழில் பொடி வியாபாரமாய்த்தான் இருந்தது. வெகு நாட்களாக எங்கள் டிவிஷனில் நல்ல பொடி கிடைக்காமலிருந்த பெருங் குறையை அவர்தான் முதன் முதலில் நிவர்த்தி செய்து வைத்தார். அதைப் பற்றி அவர் அடைந்த பெருமை இவ்வளவு அவ்வளவு அல்ல. அவரிடம் இருந்த சிறப்பான குணம் என்னவென்றால், அவர் எதையுமே எப்பொழுதுமே தமக்கென்று செய்வதில்லை; எல்லாவற்றையும் எங்கள் டிவிஷன் வாசிகளின் நன்மைக்கென்றே செய்வார். அதற்கேற்றாற்போல் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!' என்று எழுதப்பட்ட ஒரு சிறு போர்டு அவருடைய கடையின் முகப்பை எப்பொழுதும் அலங்கரித்துக் கொண்டிருக்கும். பொடி வியாபாரத்தையும் ஒரு பணியாகக் கருதிய அவருடைய மேதையை என்னவென்று சொல்வது, போங்கள்!

* * *