பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

விந்தன் கதைகள்

 அடைந்ததும் "ஏகாம்பரம் இருக்கிறாரா?" என்று ஆவலுடன் விசாரித்தேன்.

"யார் அது ஏகாம்பரமா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளேயிருந்து வந்தார் ஒருவர்.

“ஆமாம், இந்த டிவிஷன் கெளன்ஸிலரைத்தான் கேட்கிறேன்" என்றேன்.

"அவர் இந்த வீட்டை விட்டுப் போய் இரண்டு வருஷங்கள் ஆகப் போகிறதே!"

"அப்படியா இப்பொழுது எங்கே இருக்கிறார்?”

“தியாகராய நகரில்!”

"அவருடைய விலாசம் தெரியுமா?”

"தெரியாது; அடுத்தாற்போல் இருக்கும் கடைத் தெருவில் ‘ஏகாம்பரம் எம்போரியம்’ என்று ஒரு ஜவுளிக்கடை இருக்கிறது. ஒருவேளை அங்கு இருப்பார்" என்றார் அவர்.

உடனே நான் கடைத்தெருப் பக்கம் திரும்பி, ஒவ்வொரு கடையின் போர்டையும் கவனித்துக் கொண்டு சென்றேன். பத்து வருஷங்களுக்கு முன்னால் எங்கே பொடிக்கடை இருந்ததோ, அங்கே தான் ‘ஏகாம்பரம் எம்போரியம்' இருந்தது. அந்தப் பெரிய போர்டுக்குக் கீழே, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே!' என்று ஒரு சிறு போர்டு தொங்கவிடப் பட்டிருந்ததைக் கண்டதும் ‘சந்தேகமேயில்லை; இது அவருடைய கடைதான்’ என்று தீர்மானித்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். அங்கும் ஏகாம்பரத்தைக் காணவில்லை. உள்ளே யிருந்த ஒருவர், ‘உங்களுக்கு யார் ஸார் வேண்டும்?” என்று கேட்டார்.

"ஏகாம்பரம் அவர்களைப் பார்க்க வேண்டும்" என்றேன் நான் பவ்வியமாக.

"அடடா இப்பொழுது தான் அவர் இங்கிருந்து போனார். நீங்கள் ஒன்று செய்யுங்கள்; நேரே 'டவு'னுக்குச்செல்லுங்கள். அங்கே ‘ஏகாம்பரம் ஜூவல்லர்ஸ்' என்று ஒரு கடை இருக்கிறது. அந்த கடையில் அவரைப் பார்க்கலாம்" என்றார்.

எப்படியாவது அவரைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலில் அடுத்த நிமிஷமே சைனாபஜாருக்குக் கிளம்பினேன். ஆனால் என்ன ஏமாற்றம்! அங்கும் ஏகாம்பரத்தைக் காணவில்லை!!