பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கள் ஏகாம்பரம்

257

 "பணி செய்து கிடப்பதையே தங்கள் கடனாகக் கொண்டவர்களுக்கு ஒய்வென்பதே இருக்காதோ!" என்று எண்ணி நான் தயங்கிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஒருவர் என்னை நோக்கி "யாரைப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"ஏகாம்பரம் அவர்களைத்தான் பார்க்கிறேன்!” என்றேன்.

“அவர் இப்பொழுது தியாகராய நகரிலிருக்கும் பாண்டி பஜாரில் இருப்பார். அங்கே 'ஏகாம்பரம் அண்டு ஸன்ஸ் - கெமிஸ்ட்ஸ் அண்டு ட்ரக்கிஸ்ட்ஸ்' என்று ஒரு மருந்துக்கடை இருக்கிறது. இந்த நேரத்தில் அவரை அங்குதான்பார்க்கலாம். ஒருவேளை அங்கில்லாவிட்டாலும் அடுத்தாற்போல் தான் அவருடைய பங்களா இருக்கிறது. ‘ஏகாம்பர நிலையம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால் யாரும் சொல்வார்கள். அந்தப் பங்களாவில் முகப்புச் சுவரில்....." என்று அவர் மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போனார்.

நான் பொறுமையிழந்து "....அந்தப் பங்களாவின் முகப்புச் சுவரில் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எழுதியிருக்கும். அந்தப் பங்களாவிலும் அவர் இல்லாவிட்டால் கார்ப்பொரேஷன் கட்டிடத்தில் கட்டாயம் அவர் இருப்பார். அங்கும் இல்லாவிட்டால்.... " என்று அவருடன் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தேன்.

அந்த மனிதர் என்னை முறைத்துப் பார்த்தார். நானும் பதிலுக்கு அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டே நடையைக் கட்டினேன்.

எதிரே என்னுடைய நண்பன் கைலாசம் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் "என்னப்பா கைலாசம்! இந்த ஏகாம்பரத்தைப் பார்க்கவே முடியாதோ?" என்றேன் வெறுப்புடன்.

"ஏன், நீ அவருக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறாயா? அட பைத்தியமே இப்பொழுதெல்லாம் அவரை அவ்வளவு லேசில் பார்த்துவிட முடியாதே! அப்படிப் பார்ப்பதாயிருந்தால் முன்னாலேயே அவருக்கு எப்பொழுது செளகரியப்படும் என்று கேட்டுக் கொண்டுதான் நீ வந்திருக்க வேண்டும்" என்றான் அவன்.

எனக்கு ஒரே வியப்பாயிருந்தது. "என்ன, அவ்வளவுதூரம் அவர் முன்னுக்கு வந்துவிட்டாரா?" என்றேன்.

"ஆமாம், நம் டிவிஷனுக்குக் கெளன்ஸிலரானாரோ இல்லையோ டிவிஷன் முன்னுக்கு வருவதற்குப் பதிலாக அவர் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்" என்றான் அவன்.

வி.க. -17