பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழ வழியில்லை!

டைசி கடைசியாக எங்களுக்கு அப்படித்தான் தோன்றிற்று. அதாவது “நாங்கள் இந்த உலகத்திலே வாழ வழியில்லை!" என்று.

என்ன, 'எங்களுக்கு' என்றா சொன்னேன்? - இல்லை, இல்லை; எனக்குத்தான்!

இந்தத் தீர்மானத்துக்கு நான் திடீரென்று வந்து விடவில்லை; எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் தீர்க்காலோசனை செய்த பிறகுதான் வந்தேன்.

"இதை அவளிடம் இன்றே சொல்லிவிட வேண்டும், -சொல்லுவதாவது? எழுதிவிட வேண்டும்!"

இந்த எண்ணம் தோன்றியதும் ஒரு நிமிஷம் கூட நான் தாமதிக்கவில்லை; தாமதித்ததெல்லாம் போதும் என்று உடனே ஒரு காகிதத்தை எடுத்தேன்; விஷயத்தை விறு விறு'வென்று எழுதினேன்; அதை உறைக்குள் போட்டுத் திணித்துத் தபாலில் சேர்த்தேன்.

அப்புறந்தான் என்னால் வேறு காரியம் பார்க்க முடிந்தது!

கடிதத்தில் “மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்த கதை தான்!" என்று வெறுமனே எழுதிவிடவில்லை. "ஏன் விழுந்தான், எப்படி விழுந்தான்?" என்றெல்லாம் விவரித்துத்தான் எழுதினேன். ஏன் தெரியுமா என்னுடைய பேச்சுக்கு எதிர்ப்பேச்சின்றி அவள் அப்படியே என்னுடைய தீர்மானத்தை அங்கீகரித்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான்!

ஆனால், என்ன கஷ்டம் பாருங்கள்; அது தான் அவளிடம் நடக்கவில்லை.

எல்லாவற்றையும் பொறுமையுடன் படித்துவிட்டு அவள் எனக்கு என்ன எழுதியிருந்தாள் தெரியுமா? அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள்!

இத்தனைக்கும் அவள் எழுதியிருந்தது ஒரே ஒரு வார்த்தைதான். அந்த ஒரு வார்த்தை அந்த ஒரே ஒரு வார்த்தை - என்னை என்னதாக்கு தாக்கி விட்டதென்கிறீர்கள்! - அப்பப்பா! பொல்லாதவர்கள் ஐயா, இந்தப் பெண்கள் மிகமிகப் பொல்லாதவர்கள்!