பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

விந்தன் கதைகள்

அவ்வளவுதான்; அன்றைய தினத்திலிருந்து நான் அவளுடைய காதலனானேன்; அவள் என்னுடைய காதலியானாள்.

இருவருக்கும் கடிதப் போக்குவரத்து வருஷக்கணக்கில் நீடித்தது. அப்படி நீடித்ததற்குக் காரணம் எங்களுடைய ‘காதல் பிரச்சனை'யில் இருந்த ஒரே ஒரு சிக்கல்தான். அந்தச் சிக்கல் அப்படியொன்றும் அற்ப சொற்பமானதல்ல; அகில உலகத்தையும் இன்றுவரை ஆட்டிவைத்துக் கொண்டிருப்பது!

அப்படிப்பட்ட சிக்கல்தான் என்ன என்று கேட்கிறீர்களா? - அவள் ஒரு ஜாதி, நான் ஒரு ஜாதி!

இந்த ஜாதி வித்தியாசம் எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கத்தான் செய்தது, அதாவது எப்படித் தெரிந்திருந்தது என்கிறீர்களா? நான் ஆண் ஜாதி என்றும் அவள் பெண் ஜாதி என்றும் தெரிந்திருந்தது!

எங்களுக்குத் தெரியும் இந்த உண்மையை எங்களுடைய பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை; நண்பர்கள் ஒப்புக் கொள்ளவில்லை; உறவினர்கள் ஒப்புக் கொள்ளவில்லை; ஊராரும் உலகத்தாரும் ஒப்புக்கொள்ளவில்லை!

★ ★ ★

எங்கள் காதலுக்கு உவமை சொல்ல வேண்டுமானால் சந்திரனைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் எங்கள் காதல் சில சமயம் வளர்பிறைபோல் வளர்வதும் உண்டு; தேய் பிறை போல் தேய்வதும் உண்டு. இந்த வளர்ச்சியும் தேயவும் அநேகமாக அடிக்கடி மாறும் எங்களுடைய மனோபாவத்தைப் பொறுத்தே இருந்தன.

ஒருசமயம் நாங்கள் நினைப்போம் "இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் நாம் நம்முடைய காதலைக் கைவிடக் கூடாது" என்று; இன்னொரு சமயம் நினைப்போம் "இந்த உலகத்தை வெறுத்துக் கொண்டு நாம் தனியாக இருந்து என்னத்தைச் செய்வது?” என்று!

இப்படியாக எங்களுடைய மனம் பேதலித்து நின்றாலும், அவற்றையும் அறியாத ஏதோ ஒன்று எங்களை விடாப்பிடியாகப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தது. அது நாங்கள் பரஸ்பரம் கடிதம் எழுதிக் கொள்வதோடு திருப்தி யடையவில்லை; அடிக்கடி நேரில் சந்திக்க வேண்டுமென்றும், அளவளாவ வேண்டுமென்றும்,